நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்த உலக கோப்பையை நன்றாகவே தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் இந்திய அணியிடம் மட்டுமே தோற்றது. மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கருதப்பட்டாலும், இவற்றிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி தான் வலுவான அணியாக உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிற்கு சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கான வாய்ப்புள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னரின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு உத்வேகத்தை அதிகப்படுத்தியது. இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை ஏமாற்றாத வகையில் இருவரும் நன்றாக ஆடிவருகின்றனர். குறிப்பாக வார்னர் அபாரமாக ஆடி ரன்களை குவித்து வருகிறார். ஆஃப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராகவுமே சிறப்பாக ஆடினார் வார்னர். வெஸ்ட் இண்டீஸிடம் மட்டுமே ஏமாற்றினார். 

2 போட்டிகளில் அரைசதம், பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து மிரட்டினார். ஆனால் இந்த உலக கோப்பை தொடரில் வார்னர் ஆடிவரும் ஆட்டம், அவரது இயல்பான ஆட்டம் கிடையாது. வழக்கமாக களமிறங்கியது முதலே அடித்து ஆடக்கூடிய வார்னர், இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலுமே நிதானமாகவே தொடங்கினார். ஸ்லோ இன்னிங்ஸே ஆடினார். இந்தியாவிடம் 84 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் மட்டுமே அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக கூட 111 பந்துகளில் 107 ரன்கள் அடித்தார். அதை பெரிய இன்னிங்ஸாகவும் மாற்றவில்லை. 

வழக்கமாக அதிரடியாக ஆடியே அதிகமாக பார்க்கப்பட்ட வார்னரின் ஸ்லோ இன்னிங்ஸ்களை கண்ட பலர், அவரது ஸ்லோ இன்னிங்ஸை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அப்படி வார்னரை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். 

1987ம் ஆண்டு உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்தவர் ஆலன் பார்டர். ஐசிசி இணையதளத்திற்கு வார்னர் எழுதியுள்ள கட்டுரையில், வார்னரின் இன்னிங்சை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து எழுதியுள்ள ஆலன் பார்டர்,  டேவிட் வார்னர் மெதுவாக ஆடுவதாக பலர் விமர்சித்துள்ளனர். ஆனால் நல்ல வேகமும் ஸ்விங்கும் ஆகும் ஆடுகளத்தில் அவர் சிறப்பாகவே ஆடினார். அப்படித்தான் ஆடமுடியும் என்று ஆலன் பார்டர் வார்னருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.