உலக கோப்பையை முதன்முறையாக வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையில், கடந்த 4 ஆண்டுகளாக தயாராகிவந்தது இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. சொந்த மண்ணில் கோப்பையை தூக்கியே தீர வேண்டும் என்பதற்காக, அணியின் கலாச்சாரத்தையும் அணுகுமுறையையும் முற்றிலுமாக மாற்றி, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான அணியாக உருவாக்கினார் கேப்டன் மோர்கன். 

கேப்டன் மோர்கனின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து அணி. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மை அணியாகவும் அனைவராலும் பார்க்கப்பட்டது. அதேபோலவே இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸில் முதன்முறையாக கோப்பையை தூக்கியது. 

இந்த வெற்றி அந்த அணிக்கு எளிதாக கிடைத்ததல்ல. இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக திட்டமிட்டு, இங்கிலாந்து அணி கட்டமைக்கப்பட்டது. அப்படியிருக்கையில், உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்படவிருந்த நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதையடுத்து அவரை அணியில் எடுப்பது குறித்து கேப்டன் இயன் மோர்கன், அணியின் சீனியர் வீரர்களிடம் கருத்து கேட்டுள்ளார். 

அப்போது, அலெக்ஸ் ஹேல்ஸ் கண்டிப்பாக அணிக்கு தேவையில்லை என்று நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். இதுகுறித்து பென் ஸ்டோக்ஸே, அவரது “ஆன் ஃபயர்” புத்தகத்தில் எழுதியுள்ளார். 

இதுகுறித்து எழுதியுள்ள பென் ஸ்டோக்ஸ், ஒரு கேப்டனாக இயன் மோர்கன் தனது கடமையை செய்தார். அலெக்ஸ் ஹேல்ஸை உலக கோப்பை அணியில் சேர்ப்பது குறித்து சீனியர் வீரர்களிடம் கலந்தாலோசித்தார். அப்போது, அலெக்ஸ் ஹேல்ஸ் அணிக்கு தேவையில்லை என்று நான் உறுதியாக கூறிவிட்டேன். ஏனெனில் அவரால், கடந்த சில ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அணியின் சூழல் மாறிவிடக்கூடிய அபாயம் இருந்தது. அது அனைத்து வீரர்களின் கவனத்தையும் சிதறடிக்கக்கூடும் அபாயமும் இருந்தது. அதனால் அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.