ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் முடிந்த நிலையில், இந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் எடுக்கப்பட்ட வீரர்கள், பிக்பேஷ் லீக்கில் மிகச்சிறப்பாக ஆடிவருகின்றனர். 

ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் அணியால் ரூ.1 கோடிக்கு எடுக்கப்பட்ட இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன், பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஆடிவருகிறார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்தில் 64 ரன்களை குவித்து அசத்தினார். அதே போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல்லும் அபாரமாக ஆடியிருந்தார். மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி எடுத்துள்ளது.

இதையடுத்து, டெல்லி கேபிடள்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரராக இறங்கி 54 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து அசத்தினார். 

இவர்களெல்லாம் பரவாயில்லை எனுமளவிற்கு தெறிக்கவிட்டார் கிறிஸ் லின். கேகேஆர் அணியால் கழட்டிவிடப்பட்டு, மும்பை அணியால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின் பிக்பேஷ் போட்டியில் வெறும் 35 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து மிரட்டினார். 

இவ்வாறு ஐபிஎல் அடுத்த சீசனுக்கு பல்வேறு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வெவ்வேறு வீரர்கள், பிக்பேஷ் லீக்கில் மிகவும் சிறப்பாக ஆடிவருவதால் அந்தந்த அணிகள் மகிழ்ச்சியில் உள்ளன. 

ஏற்கனவே மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடியால் மகிழ்ச்சி கடலில் திளைத்துள்ள டெல்லி அணிக்கு அடுத்த மகிழ்ச்சி. அந்த அணி ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி, பிக்பேஷ் போட்டியில் அதிரடியாக ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆடிவரும் அலெக்ஸ் கேரி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாசியுள்ளார். 

 

ஏற்கனவே ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், அதிரடி பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரியும் சிறப்பாக ஆடிவருவது அந்த அணிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ரஹானே, தவான், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி என அனுபவமும் இளமையும் நிறைந்த முரட்டு படையாக உள்ளது.