ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 258 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களையும் அடித்தன. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 48 ஓவரில் 267 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில், ஆர்ச்சர் வீசிய 77வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்மித்திற்கு பின் கழுத்தில் அடிபட்டது. ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய அந்த பந்து ஸ்மித்தின் பின் கழுத்து பகுதியில் பலமாக அடித்தது. அடி வலுவாக விழுந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். பொதுவாக இதுபோன்ற பவுன்ஸர்கள் வீசப்பட்டு, பேட்ஸ்மேன்கள் அடிபட்டு கீழே விழுந்தால், முதல் ஆளாக ஓடிச்சென்று நலம் விசாரிப்பதும் உதவுவதும், அந்த பந்தை வீசிய பவுலராகத்தான் இருக்கும். ஆனால் ஆர்ச்சரோ, ஸ்மித்தை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் நகர்ந்து சென்றார். 

அதுமட்டுமல்லாமல் ஸ்மித் வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது, பட்லரும் ஆர்ச்சரும் சிரித்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைக்கண்ட ரசிகர்கள், ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், ஸ்மித்திற்கு அடிபட்டது குறித்து பிபிசி-க்கு பேட்டியளித்த ஆர்ச்சர், கீழே விழுந்த ஸ்மித், மீண்டும் எழுந்தபின்னர் தான் அனைவருக்கும் உயிரே திரும்பவந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் யாரையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்ல வேண்டுமென்று யாருமே விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். 

ஆனால் ஸ்மித் கீழே விழுந்தபோது, ஆர்ச்சர் பக்கத்தில் கூட போகாததை அக்தர் கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அக்தர் பதிவிட்டுள்ள டுவீட்டில், பவுன்ஸர் வீசுவது ஆட்டத்தில் ஒரு அங்கம்தான். ஆனால் பந்து பேட்ஸ்மேனின் தலையில் தாக்கி அவர் கீழே விழுகும்போது, பவுலர் அவரிடம் சென்று அவரை நலம் விசாரிப்பதும் அவரது நிலையை கேட்டறிவதும் அவசியம். ஆனால் ஸ்மித் வலியில் துடிக்கும்போது அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நகர்ந்து சென்றார் ஆர்ச்சர். நான் பந்துவீசி பேட்ஸ்மேனுக்கு அடிபட்டால், அவரிடம் முதலில் சென்று விசாரிக்கும் நபர் நான் தான் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.