உலக கோப்பை அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியதை அடுத்து கேப்டன் மாற்றம் குறித்த பேச்சு உலாவந்தது. 

ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை தூக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

இந்திய அணியில் தற்போதிருக்கும் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க ரோஹித்தால் முடியும் என்பதால் கேப்டனை மாற்ற இதுவே சரியான தருணம் என பிசிசிஐ அதிகாரியே தெரிவித்திருந்தார். 

ஆனாலும் கோலி தான் கேப்டனாக தொடர்கிறார். இந்திய கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக திகழும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பிலிருந்து இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

உலக கோப்பை தோல்விக்கு பின்னரும் கோலியே கேப்டனாக தொடர்வதற்கு கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். உலக கோப்பை வரைதான் கோலி கேப்டன் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் உலக கோப்பைக்கு பின்னரும் எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் மீண்டும் கோலியே கேப்டனாக தொடர்கிறார். 

தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் உலக கோப்பையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர். அப்படி பார்த்தால், ஒரு கேப்டனாக கோலியும் தான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அவர்கள் மட்டும் தூக்கி எறியப்பட்டார்கள். கோலி கேப்டன் பொறுப்பில் தொடர்கிறார் என்று அதிரடியாக தெரிவித்திருந்தார். 

கவாஸ்கரின் இந்த கருத்திலிருந்து சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட்டிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் அக்தரிடம் ரசிகர் ஒருவர், இந்திய அணியின் கேப்டனாக கோலிக்கு பதிலாக ரோஹித் பொறுப்பேற்க வேண்டுமா? என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தேவையில்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார் அக்தர்.