இந்திய அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டுவிட்டார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

மூன்றுவிதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட்டே முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இவர் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதால், அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் சொதப்பினார். நெருக்கடியான சூழலிலும் சொதப்பினார், நெருக்கடி இல்லாத நிதானமாக ஆட வாய்ப்பிருந்த சூழலிலும் சொதப்பினார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக வாய்ப்புள்ள சஞ்சு சாம்சனும் இஷான் கிஷானும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அதனால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. 

ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப் பண்ட், சொதப்ப சொதப்ப அவர் மீதான அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் மீது தேவையில்லாமல் அதிக நெருக்கடி கொடுக்கப்படுவதாக அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஜித் அகார்கர்,  இந்தியாவிற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்களை அடித்த ரிஷப் பண்ட், சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவர் மீது அதிக நெருக்கடியை கொடுக்கும் விதமாக பேசுவது சரியல்ல. டி20 போட்டிகள் சில நேரங்களில், சரியாக ஆடமுடியாத அளவுக்கு கடும் சவாலாக அமைந்துவிடும்.  அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட்டிடமிருந்து அணிக்கு என்ன தேவை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவரை நான்காம் வரிசையில் இறக்கப்போகிறீர்களா அல்லது அல்லது ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக்க விரும்புகிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். 

ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். அதனால் அவரை நான்காம் வரிசையில் இறக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை பின்வரிசையில் இறக்கி, அவரது ஆட்டத்தை ஆடவிடலாம். ரிஷப் பண்ட் மீது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. தேவையில்லாத சில நெருக்கடிகள் அவருக்கு கொடுக்கப்படுகின்றன. அவர் இளம் வீரர், இப்போதுதான் இந்திய அணிக்காக ஆட தொடங்கியிருக்கிறார். இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்யக்கூடிய வீரர் ரிஷப் என அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.