ஆஸி., சுற்றுப்பயணத்தில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறியபோதிலும், கடைசி வரை அணியில் வாய்ப்பே பெறாத வீரர் குல்தீப் யாதவ். அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 பிரைம் ஸ்பின்னர்களும் காயத்தால் கடைசி போட்டியில் ஆடாத போது கூட, வாஷிங்டன் சுந்தர் தான் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர, குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், குல்தீப் யாதவிற்கான நேரம் கண்டிப்பாக விரைவில் வரும் என்று ரஹானே கூறியிருக்கிறார். ஆஸி., தொடர் முடிந்ததும், ஓய்வறையில் கேப்டன் ரஹானே பேசிய வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது. 

அதில் பேசிய ரஹானே, குல்தீப் மற்றும் கார்த்திக் தியாகியை குறிப்பிட விரும்புகிறேன். குல்தீப்பிற்கு இந்த தொடர் கடினமானது. ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. உனது ஆட்டிடியூட் சிறப்பாக இருந்தது. நாம் இந்தியாவிற்கு செல்கிறோம். உனக்கான நேரம் வரும். அதுவரை உனாது கடின உழைப்பை மட்டும் தொடர்ந்துகொண்டே இரு என்று ரஹானே கூறியிருக்கிறார்.

அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடவுள்ள நிலையில், அந்த தொடர் குல்தீப்பிற்கான நேரம் என்று பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.