ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகாலத்தின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு நிகரான புகழ், பெருமையுடன் திகழ்வதற்கான திறமையும் தகுதியும் இருக்கும் வீரர் அஜிங்க்யா ரஹானே. ஆனால் அவர் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தரமான பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர். பேட்டிங்கில் எந்த ஆர்டரிலும் இறங்கி, சூழலுக்கு ஏற்றவாறு தாக்குதல் மற்றும் தடுப்பு ஆகிய இரண்டுவிதமான ஆட்டத்தையும் ஆடக்கூடியவர் ரஹானே. 

ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் அதிக சராசரியை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவை விட வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக சராசரியை வைத்திருப்பவர் ரஹானே. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோஹித், கோலி ஆகியோரை விட சிறப்பாக ஆடியிருப்பவர் ரஹானே. 

டெஸ்ட்டில் மட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளிலும் ரஹானே நன்றாகத்தான் ஆடிவந்தார். இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2962 ரன்கள் அடித்துள்ளார். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்கி சிறப்பாக ஆடுபவர் ரஹானே. 

நான்காம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே, திடீரென 2018ம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பைக்கு(2019) ஓராண்டு இருந்த நிலையில், திடீரென ரஹானேவை ஓரங்கட்டிவிட்டு, நான்காம் வரிசை வீரரை தேடும் பணியில் இறங்கியது இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும். சரியான நான்காம் வரிசை வீரரை 2019 உலக கோப்பைக்கு முன்பு தேர்வு செய்து அந்த இடத்தை நிரப்பாததால், உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி. 

ரஹானே அருமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவருக்கு அதன்பின்னர் ஒருநாள் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரை நிரப்பிவிட்டனர். அதனால் இனிமேல் ரஹானேவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். 

ஆனாலும் ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ரஹானே. அதுகுறித்து இந்தியா டுடேவிடம் பேசிய ரஹானே, ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது முதல் திட்டம். நான் பொதுவாக என்னுடைய ரெக்கார்டு பற்றியெல்லாம் பேசுவதில்லை. ஆனால் இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.. நான் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவதற்கு முந்தைய 3-4 ஆண்டுகள் மிகச்சிறப்பாக ஆடியிருந்தேன்.

தொடக்க வீரராகவோ அல்லது நான்காம் வரிசையிலோ, 2 பேட்டிங் ஆர்டரிலும் எனது ரெக்கார்டு நன்றாகவே உள்ளது. எனது ஸ்டிரைக் ரேட்டும் சிறப்பாகவுள்ளது. எனவே ஒருநாள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் எனது திட்டம். எப்போது அந்த வாய்ப்பு வரும் என எனக்கு தெரியவில்லை. ஆனால் அதற்காக உண்மையாக மிகக்கடினமாக உழைத்துவருகிறேன். என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கை, நேர்மறையான சிந்தனை, துணிச்சல் ஆகியவற்றின் மூலம் சாத்தியப்படும் என நம்புகிறேன். ஐபிஎல் அதற்கு நல்ல ப்ளாட்ஃபார்ம். ஆனால் அதற்காக நான் யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஐபிஎல்லில் முழு சுதந்திரத்துடன் எனது அணியின் வெற்றிக்காக ஆட வேண்டும்.  அவ்வளவுதானே தவிர, என்னை யாரிடமும் நிரூபிக்க தேவையில்லை.

நான் இந்திய அணிக்காக நிறைய பங்களிப்பு செய்திருக்கிறேன். மற்ற சில விஷயங்களும் பரிசீலிக்கப்படும் என நினைக்கிறேன். நான் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் நான் சிறப்பாகவே ஆடியிருக்கிறேன். அதனால் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எனது ஆட்டத்தில் மட்டுமே மிகுந்த கவனம் செலுத்தி கடுமையாக உழைத்துவருகிறேன் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.