இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி ஆடாததால், ரஹானே தான் கேப்டன்சி செய்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் படுமோசமாக சொதப்பிய தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு பதிலாக 2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் தொடக்க வீரராக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த போட்டியில் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக இறங்குகின்றனர். மேலும் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட், கோலிக்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஷமிக்கு பதிலாக சிராஜ் என மொத்தம் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சரியான தொடக்கம் அமையாதது தான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவும் பாதிப்பாகவும் அமைந்தது. இந்நிலையில், இனிவரும் போட்டிகளில் தொடக்க வீரர்களை கையாளும் முறை குறித்து கேப்டன் ரஹானே பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அஜிங்க்யா ரஹானே, தொடக்க வீரரின் ரோல் என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல; எந்த நாட்டில் ஆடினாலும் தொடக்க வீரர் ரோல் சவாலானது மற்றும் முக்கியமானது. எனவே எங்கள் தொடக்க வீரர்கள் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் போட விரும்பவில்லை. அவர்களது ஆட்டத்தை ஆடுவதற்கான சுதந்திரத்தை வழங்க விரும்புகிறேன். தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தால், அது பின்வரும் பேட்ஸ்மேன்களுக்கு பெரியளவில் உதவும் என்று ரஹானே தெரிவித்தார்.

ரஹானே மிகச்சிறந்த கேப்டன்சி மெட்டீரியல். நிதானமான, தெளிவான, ஆக்ரோஷத்தை வெளியில் காட்டாத இயல்புடைய ரஹானே, வீரர்களின் கேப்டன். பேட்ஸ்மேன் அல்லது பவுலர் யாராக இருந்தாலும், அவர்களின் பலம் மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப அவர்களை ஆட அனுமதித்து, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருபவர். அதனால், அவர் தொடக்க வீரர்கள் மீது அழுத்தம் போடாமல் சுதந்திரமாக ஆடவிடுவேன் என்று சொன்னதில் ஆச்சரியமில்லை. முதல் டெஸ்ட்டின் தோல்விக்கு பிறகு, இப்படியான கேப்டன்சி தான் இந்திய அணிக்கும் தேவை.