இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஸ்பின்னர் அஜாஸ் படேலுக்கு, வங்கதேசத்துக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியிலும், ஜனவரி 9ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சிலும் நடக்கவுள்ளன.
இந்தியாவில் இந்திய அணியிடம் 1-0 என டெஸ்ட் தொடரை இழந்த நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் வங்கதேசத்தை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலுக்கான கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் தொடர் வெற்றிகளை பெற வேண்டும். அப்போதுதான் வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் ஃபைனலுக்கு முன்னேறமுடியும். எனவே வெற்றி வேட்கையில் உள்ளது நியூசிலாந்து அணி.
வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் இந்த தொடரில் ஆடவில்லை. எனவே டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார்.
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் வில் யங், டேரைல் மிட்செல், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டெவான் கான்வே ஆகிய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல். ஸ்பின்னராக ராச்சின் ரவீந்திரா மட்டும் எடுக்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக கைல் ஜாமிசன், டிம் சௌதி, நீல் வாக்னெர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய, ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இடது கை ஸ்பின்னரான அஜாஸ் படேலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக அண்மையில் ஆடிய டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய அஜாஸ் படேலுக்கு அணியில் இடம் கிடைக்காதது அவருக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட் அணி:
டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டேரைல் மிட்செல், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னெர், மாட் ஹென்ரி, டெவான் கான்வே.
