உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பைக்கான அணிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் 15 வீரர்களை கொண்ட உலக கோப்பை அணியை அறிவித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, ஆல்டைம் சிறந்த வீரர்களை கொண்ட உலக கோப்பை அணியை அறிவித்துள்ளார். 

இந்த அணியில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, முத்தையா முரளிதரன் ஆகிய ஜாம்பவான்களுக்கு அஃப்ரிடி இடம் கொடுக்கவில்லை. அதேநேரத்தில் விராட் கோலிக்கு இடம் கொடுத்துள்ளார் அஃப்ரிடி. அஃப்ரிடி தேர்வு செய்துள்ள அணியில் விராட் கோலி மட்டுமே சமகால கிரிக்கெட் வீரர். மற்றவர்கள் அனைவருமே பழைய வீரர்கள். 

அஃப்ரிடியின் அணியில் அன்வர், கில்கிறிஸ்ட், பாண்டிங், காலிஸ், வாசிம் அக்ரம், வார்னே ஆகியோரை சேர்த்துள்ளார். 

அஃப்ரிடி தேர்வு செய்துள்ள ஆல்டைம் சிறந்த உலக கோப்பை அணி:

சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், ஷேன் வார்னே, சாக்லைன் முஷ்டாக், ஷோயப் அக்தர்.

இந்த அணியில் சச்சின் டெண்டுல்கரை வேண்டுமென்றே அஃப்ரிடி ஒதுக்கியிருப்பது தெரிகிறது. இது அவரது பார்வையிலான சிறந்த உலக கோப்பை வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும், 1992, 1996, 1999, 2003, 2007, 2011 என 6 உலக கோப்பையில் ஆடி உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரை ஒதுக்கியிருப்பதை உள்நோக்கமாகத்தான் பார்க்க முடிகிறது. ஆரோக்கியமான தேர்வாக இந்த அணியை பார்க்க முடியாது. 2003ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 600க்கும் அதிகமான ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். தற்போதுவரை சச்சின் அந்த உலக கோப்பை தொடரில் அடித்த ரன்கள் தான் ஒரு வீரரால் உலக கோப்பை தொடரில் குவிக்கப்பட்ட அதிகமான ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஜாம்பவானை வேண்டுமென்றே ஒதுக்கியிருக்கிறார் அஃப்ரிடி.