2019 உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பெரும்பாலான ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் வலுவாக உள்ளன. இங்கிலாந்தில் நடந்த 2009 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றதால், இங்கிலாந்தில் நன்றாக ஆடிவரும் பாகிஸ்தான் அணியும் சிறந்த அணியாக பார்க்கப்பட்டது. 

ஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது பாகிஸ்தான் அணிக்கு பெரிய அடியாக இருந்தது. பேட்டிங் சிறப்பாக இருக்கும் நிலையில், பவுலிங்கும் ஃபீல்டிங்கும் மோசமாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து தொடர் முடிந்ததும் உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. 

 அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலியும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டனர். அணியில் எடுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட மூவரில் இருவர் அமைதியாக இருக்க, ஜுனைத் கான் தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தினார். 

8 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான ஜுனைத் கான், 2015 உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இந்த உலக கோப்பை அணியில் இடம்பெற்றதும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அதற்கும் ஆப்படிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஜுனைத் கான், வாயில் கருப்பு நிற டேப் போட்டு மூடிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில், ஜுனைத் கான் ரியாக்ட் செய்தது தவறு என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அஃப்ரிடி, ஜுனைத் கான் செய்தது தவறு. நான் அவரது இடத்தில் இருந்திருந்தாலும் அவரைப்போலத்தான் ரியாக்ட் செய்திருப்பேன். ஆனாலும் அப்படி செய்வது தவறு. ஜுனைத் கான் நல்ல பவுலர். முதல் உலக கோப்பையை ஆடப்போகிறோம் என்ற நம்பிக்கையில் இருந்த வீரர், திடீரென புறக்கணிக்கப்பட்டால் அதிருப்தி அதிகமாகத்தான் இருக்கும் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.