கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் தீவிரமடைந்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்தாகிவிட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

கொரோனா ஊரடங்கால் சர்வதேச பொருளாதாரமே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அனைத்து நாடுகளும் பொதுமக்களிடம் இருந்து நிதியுதவி கோரும் அளவிற்கு நெருக்கடியான நிலை உள்ளது. ஆனால் பொருளாதாரத்தை விட மக்களின் உயிரே முக்கியம் என்பதால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதனால் விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் ஒருநாள் தொடரை நடத்தி, அதன்மூலம் நிதி திரட்டலாம் என அக்தர் தெரிவித்திருந்தார். அதாவது ரசிகர்கள் இல்லாமல் அந்த தொடரை நடத்தி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் கிடைக்கும் தொகையை நிதியாக திரட்டலாம் என்று அக்தர் தெரிவித்திருந்தார். 

அக்தரின் ஆலோசனைக்கு பதிலளித்திருந்த கபில் தேவ், பிசிசிஐயிடம் போதுமான நிதி இருக்கிறது. பிரதமரின் நிதிக்கு ரூ.51 கோடி பிசிசிஐ நிதியுதவி அளித்திருக்கிறது. அந்தளவிற்கு பிசிசிஐயிடம் போதுமான நிதி இருக்கிறது. இந்த நேரத்தில் வீரர்களின் பாதுகாப்பே முக்கியம். வீரர்களை ரிஸ்க் எடுத்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போதைக்கு  கிரிக்கெட்டை பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று கபில் தேவ் பதிலளித்திருந்தார்,

கபில் தேவி கருத்தை கேட்ட அக்தர், கபில் தேவ்(bhai) நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டுவிட்டார். அனைவருமே பொருளாதார ரீதியாக பிரச்னையை எதிர்கொண்டுள்ள இந்த சூழலில், நிதி திரட்டும் விதமாக நாம் இணைந்து முன்வந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்றுதான் நான் கூறினேன் என்று தனது பார்வையை தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், கபில் தேவின் கருத்து குறித்து பேசியுள்ள அஃப்ரிடி, இந்தியா தொடர்பான விஷயங்களில் எப்படி மண்டைக்கணமாக பேசுவாரோ, அதேமாதிரியாகவே இப்போதும் பேசியுள்ளார். “அக்தர் மனிதநேய  அடிப்படையில் பாசிட்டிவான ஒரு விஷயத்தை பேசினார். ஆனால் அதற்கு கபில் தேவ் கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது. இந்தியாவில் சிலர் உணவு கிடைக்காமல் குப்பைகளில் இருந்து எடுத்து சாப்பிடுவதாக வீடியோவில் பார்த்திருக்கிறேன். கபில் தேவை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் அப்படி சொல்லியிருக்கக்கூடாது என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
 
அஃப்ரிடியின் கருத்துக்கு கண்டிப்பாக கம்பீர் பதிலடி கொடுப்பார் என்று 100% நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.