உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தானுடன் மோதுகிறது பாகிஸ்தான் அணி. 

இந்த உலக கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதேநேரத்தில் இங்கிலாந்து அணி அதன் எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.

அந்த வகையில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஆடுகிறது பாகிஸ்தான். ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. எனவே அந்த அணிக்கு இந்த உலக கோப்பை தொடரில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டி. 

லீட்ஸில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் நைப், பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸ் தோற்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, நாங்களும் முதலில் பேட்டிங் ஆடலாம் என்றுதான் நினைத்தோம். என்ன செய்வது? டாஸ் ஜெயிப்பது நமது கையில் இல்லையே என்று தெரிவித்தார். எனினும் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிகரமாக இலக்கை விரட்டிய நம்பிக்கையுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான்.

இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் பாகிஸ்தான் அணி ஆடுகிறது. 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சொஹைல், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், ஷதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிடி. 

ஆஃப்கானிஸ்தான் அணி:

குல்பாதின் நைப்(கேப்டன்), ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி, ஷின்வாரி, நஜிபுல்லா ஜட்ரான், இக்ரம் அலி கில்(விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், ஹமித் ஹாசன், முஜீபுர் ரஹ்மான்.