ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடந்தது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி, கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான்  41 ரன்களும், முகமது நபி 32 ரன்களும் குல்பாதின் 36 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ரஷீத் கான், அதிரடியாக  ஆடி 40 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் விளாச, ஆஃப்கான் அணி ஐம்பது ஓவரில் 266 ரன்கள் அடித்தது.

267 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி சதமடிக்க, மறுமுனையில் மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதிரடியாக ஆடி சதமடித்த ஸ்டெர்லிங் 118 ரன்களில் முஜீபுர் ரஹ்மானின் பந்தில் ஐந்தாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

ஸ்டெர்லிங் அவுட்டாகும்போது, அயர்லாந்து அணியின் ஸ்கோர் 187. அடுத்த 43 ரன்களில் அடுத்த ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து, 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது அயர்லாந்து அணி.

இதையடுத்து அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை வென்றது. ஆட்டநாயகனாக ரஷீத் கானும், தொடர் நாயகனாக பால் ஸ்டெர்லிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.