Asianet News TamilAsianet News Tamil

முகமது நபி, குல்பாதின் நைப் அதிரடி பேட்டிங்..! பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 147 ரன்கள் அடித்து, 148 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

afghanistan set challenging target to pakistan in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 29, 2021, 9:37 PM IST

டி20 உலக கோப்பையில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற அதே நம்பிக்கையுடன் தான் ஆஃப்கானிஸ்தானும் களமிறங்கியது.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இரு அணிகளும் எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ்,ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷேஷாத்தும் 8 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ்(10), அஸ்கர் ஆஃப்கான்(10), கரீம் ஜனத்(15) ஆகிய மூவரும் நன்றாக கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், அவசரப்பட்டு அடுத்தடுத்து பெரிய ஷாட்டுக்கு முயன்று ஆட்டமிழந்தனர்.

ஆனால் 12.5 ஓவரில் 76 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, அதன்பின்னர் கேப்டன் முகமது நபி மற்றும் குல்பாதின் நைப் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் நிலைத்து ஆடி, செட்டில் ஆனபின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஹசன் அலி வீசிய 18வது ஓவரில் 21 ரன்கள் அடித்தனர். ஹாரிஸ் ராஃப் வீசிய 19வது ஓவரிலும் 3 பவுண்டரிகளை அடித்தனர். கடைசி ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி நன்றாக வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து 20 ஓவரில் 147 ரன்கள் அடித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 148 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்த நிலையில், அந்த இலக்கை பாகிஸ்தான் விரட்டிவருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு இந்த இலக்கை விரட்டுவது சவாலான காரியமாகவே இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios