Asianet News TamilAsianet News Tamil

AFG vs BAN T20 WC 2024: முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்!

வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது.

Afghanistan made history by enter into the semi-finals for the first time in T20 World Cup 2024 rsk
Author
First Published Jun 25, 2024, 1:08 PM IST | Last Updated Jul 19, 2024, 2:03 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சூப்பர் 8 சுற்று போட்டியில் முதலில் இந்தியாவிடம் தோற்ற ஆப்கானிஸ்தான் கடைசி 2 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அதன்படி முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மிக முக்கியமான வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். மேலும், ஆஸ்திரேலியா வெளியேறும். இந்தப் போட்டியில் வங்கதேசம் குறைவான ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அதிக நெட் ரன் ரேட் பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது.

இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி இன்று நடபெற்றது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 116 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேசம் பேட்டிங் செய்தது. இதில், 12.1 ஓவர்களில் வங்கதேசம் வெற்றி பெற்றால் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால், வங்கதேசம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரஷீத் கான் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

வங்கதேச அணியானது 11.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. மேலும், 114 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஏற்கனவே 7 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் கடைசியாக 17.5 ஓவர்களைல் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தற்போது சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios