உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றியை பெற்ற பிறகு கூடுதல் உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டுள்ளது பாகிஸ்தான். 

பாகிஸ்தான் அணிக்கு இது கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டி. ஆனால் இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே நெருக்கடி பாகிஸ்தான் அணிக்குத்தான். 

டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. டாஸ் வென்ற ஆஃப்கான் கேப்டன் நைப், அப்போதே பாகிஸ்தான் வயிற்றில் புளியை கரைத்துவிட்டார். டாஸ் வென்றதும் பேசிய குல்பாதின் நைப், நாங்கள் முதலில் பேட்டிங் ஆடப்போகிறோம். பிட்ச் நன்றாக உள்ளது. வெயில் நன்றாக அடிப்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் ஸ்பின்னர்களுக்கு இது சாதகமாக அமையும். பாகிஸ்தான் சிறந்த அணி. எனினும் பயிற்சி போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தியிருக்கிறோம். எனவே அதே நம்பிக்கையுடன் இன்றும் களமிறங்குகிறோம். 100 சதவிகிதம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.