ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என வென்றது. தற்போது டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 147 ரன்கள் அடித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆனால் அனைவருமே பங்களிப்பு செய்ததால் 147 ரன்கள் கிடைத்தது. 

லெவிஸ், ஹெட்மயர், ரூதர்ஃபோர்டு, பொல்லார்டு என அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது எளிய இலக்குதான். ஏனெனில் இவர்களில் ஒருவர் நின்று அடித்தால் கூட வெற்றி பெற்றுவிட முடியும். ஆனால் இவர்களில் யாரையுமே பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் தடுத்துவிட்டனர் ஆஃப்கானிஸ்தான் பவுலர்கள். 

தொடக்கம் முதலே லெவிஸ், பிரண்டன் கிங், ஹெட்மயர், ரூதர்ஃபோர்டு, பொல்லார்டு, ஹோல்டர் என சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. அதன் விளைவாக அந்த அணி 20 ஓவரில் வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கரீம் ஜனத். இவர்தான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.