ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடந்துவருகிறது.

முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்தார். அவரைத்தவிர வேறு எந்த ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேனும் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. குர்பாஸ் ஒருமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த, மற்ற வீரர்கள் மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்தனர். 

குர்பாஸின் அதிரடியான பேட்டிங்கால், 20 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 156  ரன்கள் அடித்தது. 157 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் மட்டுமே அரைசதம் அடித்தார். அதுவும் அணியை வெற்றி பெற வைக்க எந்தவிதத்திலும் பயன்படாத இன்னிங்ஸ். 46 பந்துகளில் 52 ரன்களை மட்டுமே அடித்தார். 46 பந்துகள் பேட்டிங் ஆடிய ஒரு பேட்ஸ்மேன், தான் வீணடித்த பந்துகளை ஈடுகட்டாமல் சென்றால் அந்த இன்னிங்ஸ் எந்த விதத்திலும் பயன்படாத இன்னிங்ஸ்தான். அப்படியான ஒரு இன்னிங்ஸைத்தான் ஷாய் ஹோப் ஆடிவிட்டு சென்றார். 

லெவிஸ், ஹெட்மயர், பொல்லார்டு, ஹோல்டர் என யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என டி20 தொடரை வென்றது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக, 79 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக கரீம் ஜனத் தேர்வு செய்யப்பட்டார்.