உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்கும் நிலையில், உலக கோப்பையில் ஆடும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஃப்கானிஸ்தான் அணி கலந்துகொள்ளும் இரண்டாவது உலக கோப்பைதான் இது. உலக கோப்பைக்கு அந்த அணி கத்துக்குட்டியாக இருந்தாலும் சமீபகாலமாக அந்த அணி ஆடிவரும் ஆட்டம் அபாரமானது. ஆசிய கோப்பை தொடரில் கூட இந்திய அணியை வெற்றி பெறவிடாமல் கடைசி பந்தில் கட்டுப்படுத்தி போட்டியை டிரா செய்தது. 

எனவே ஆஃப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த உலக கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். எனினும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணியும் செம டஃப் கொடுக்கும். 

ரஷீத் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் பலர் ஆஃப்கான் அணியில் உள்ளனர். இந்நிலையில், குல்பாதின் நைப் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முகமது ஷேஷாத், ஹஸ்ரதுல்லா சேசாய், அஸ்கர் ஆஃப்கான் ஷாஹிடி ஆகியோர் அணியில் உள்ளனர். ரஷீத் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கண்டிப்பாக அணியில் இருப்பர் என்பது தெரிந்ததுதான். ஆனால் எதிர்பாராத தேர்வாக, அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஹமித் ஹசன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஃப்கான் அணியில் ஆடாத ஹசன் உலக கோப்பை அணியில் இடம்பிடித்திருக்கிறார். அனுபவ ஃபாஸ்ட் பவுலரான ஹசன் உலக கோப்பை அணியில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். 

உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி:

குல்பாதின் நைப்(கேப்டன்), முகமது ஷேஷாத்(விக்கெட் கீப்பர்), நூருல் ஸட்ரான், ஹஸ்ரதுல்லா சேசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆஃப்கான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, நஜிபுல்லா ஸட்ரான், ஷின்வாரி, முகமது நபி, ரஷீத் கான், தவ்லட் ஸட்ரான், அஃப்டப் ஆலம், ஹமித் ஹசன், முஜீபுர் ரஹ்மான்.