உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக கருத்து இருந்தாலும், ஆஃப்கானிஸ்தான் அணி எப்படி ஆடுகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் ஆவலாக இருக்கின்றனர். 

ஆஃப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியிடமும் தோற்றது. இலங்கை அணியிடம் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் தோல்வியை தழுவியது. 

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பேட்டிங் ஆர்டர் நன்றாக இருந்தாலும் பேட்டிங்கை விட அந்த அணியின் பவுலிங் தான் செம பலம். முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி தோற்ற நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணி உள்ளது. 

இந்நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி தொடக்க வீரருமான ஷேஷாத், முழங்கால் காயத்தால் உலக கோப்பை தொடரிலிருந்தே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இக்ராம் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எதிரணி பவுலர்களை தனது அதிரடியால் தொடக்கத்திலேயே மிரட்டும் திறன் கொண்டவர் ஷேஷாத். அவர் தொடரிலிருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரிய இழப்பு. 

அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட்டானார். இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சரியாக ஆடவில்லை. வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.