20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் அடிக்கப்பட்டது. 2வது விக்கெட்டை 144 ரன்களில் இழந்த இலங்கை அணி, அடுத்த 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. 

பின்னர் மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடர்ந்து நடந்தது. இலங்கை அணி 37வது ஓவரில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டக்வொர்த் லிவைஸ் முறைப்படி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 41 ஓவரில் 187 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணி 33வது ஓவரில் 152 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. 

இந்த போட்டியில் முகமது நபி 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார். இலங்கை அணி ஆரம்பத்தில் அபாரமாக ஆடியது. இலங்கை அணி முதல் விக்கெட்டையே 92 ரன்களில் தான் இழந்தது. 144வது ரன்னில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. 21 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது இலங்கை அணி. 

22வது ஓவரில் இலங்கை அணியை நிலைகுலைய செய்தார் முகமது நபி. அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் திரிமன்னேவை வீழ்த்திய முகமது நபி, நான்காவது பந்தில் குசால் மெண்டிஸையும் கடைசி பந்தில் அனுபவ வீரர் மேத்யூஸையும் வீழ்த்தினார். 21வது ஓவரில் முடிவில் 144/1 என இருந்த இலங்கை அணி, 22வது ஓவர் முடிவில் 146/4 என்றானது. அதன்பின்னர் இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியை சரித்தது முகமது நபி தான்.

 

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் நபி. 1999ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் முகமது நபி. 1999ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஸ்பின்னர் சாக்லைன் முஷ்டாக், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர் உலக கோப்பையில் எந்த வீரரும் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு முகமது நபி அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.