கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், இப்போது எந்த போட்டியும் நடக்கவில்லை. அதனால் வீடுகளில் முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது, ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது என பொழுதுபோக்கிவருகின்றனர்.

சில கிரிக்கெட் வீரர்கள் ஆல்டைம் லெவன் மற்றும் சமகால கிரிக்கெட்டின் பெஸ்ட் லெவனை தேர்வு செய்கின்றனர். அந்தவகையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இங்கிலாந்து ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத், சமகால  கிரிக்கெட்டின் உலக லெவனை தேர்வு செய்துள்ளார்.

தனது உலக லெவன் அணியின், தொடக்க வீரர்களாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மாவையும் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் கோலியை தவிர வேறு யாரையும் தேர்வு செய்ய வாய்ப்பில்லை. ஆம்.. கோலி தான் ஒன் டவுன். 

சமகால கிரிக்கெட்டின் வளர்ந்துவரும் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், எதிர்காலத்தில் விராட் கோலிக்கு நிகரான வீரராக திகழ்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிற பாபர் அசாமை நான்காம் வரிசை வீரராகவும் ஐந்தாம் வரிசைக்கு தனது கேப்டன் இயன் மோர்கனையும் தேர்வு செய்துள்ளார் அடில் ரஷீத். இந்த உலக லெவன் அணியின் கேப்டனாகவும் இயன் மோர்கனைத்தான் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பரான பட்லரையும் ஆல்ரவுண்டராக 2019 உலக கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸையும் தேர்வு செய்துள்ளார் ரஷீத். ஸ்பின்னராக தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரபாடா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். 

அடில் ரஷீத்தின் பெஸ்ட் உலக லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, பாபர் அசாம், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், இம்ரான் தாஹிர், ட்ரெண்ட் போல்ட், காகிசோ ரபாடா.