இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் 4 போட்டிகளில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் வென்று நான்கு போட்டிகளின் முடிவிலேயே தொடரை வென்றுவிட்டது இங்கிலாந்து. கடைசி போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 351 ரன்களை எடுத்தது. 352 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 47வது ஓவரில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

பாகிஸ்தான் அணி முதல் 3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமதுவும் பாபர் அசாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இந்த ஜோடியை இங்கிலாந்து அணி பிரித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனை. 80 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். 

ஆனால் அவர் அவசரப்பட்டு ரன் அவுட்டாகிவிட்டார். 27வது ஓவரின் 2வது பந்தை லெக் திசையில் அடித்தார் சர்ஃபராஸ். பந்து தூரமாக செல்லாமல் பக்கத்திலேயேதான் கிடந்தது. பேட்டிங் முனை பாபர் அசாமுக்குத்தான் டேஞ்சர் எண்ட். ஆனாலும் அவர் ஒரு ரன் ஓடிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓடினார். சர்ஃபராஸ் ரன் ஓட மறுக்க, இதற்கிடையே விக்கெட் கீப்பர் பட்லர் பந்தை எடுத்து விரைவாக பவுலர் அடில் ரஷீத்திடம் வீசினார். அந்த பந்தை பிடித்த ரஷீத், ஸ்டம்பை பார்க்காமலேயே ஸ்டம்பில் அடித்தார். பாபர் அசாம் ரன் அவுட்டானார். 

அடில் ரஷீத்தின் சாமர்த்தியமான யோசனையால் பாபர் அசாம் ஆட்டமிழந்தார். ரஷீத் பந்தை பிடித்ததும் நேராக திரும்பி அடிக்க நினைத்திருந்தால், அதற்குள் பாபர் அசாம் கிரீஸுக்குள் வந்திருப்பார். ஆனால் அதை அறிந்து உடனடியாக ஸ்டம்பை பார்க்காமலேயே கணிப்பில் கரெக்ட்டாக அடித்தார். அவசரத்திற்கு சாமர்த்தியமான முறையில் சமயோசித சிந்தனையால் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை எடுத்து தோனிதான் சிறந்த பல ரன் அவுட்டுகளை செய்வார். தோனியிடமிருந்து இப்படியெல்லாம் கூட ஸ்மார்ட்டாக செயல்பட முடியும் என்பதை கற்றுக்கொண்ட மற்ற வீரர்களும் தற்போது அதை துல்லியமாக செயல்படுத்துகின்றனர்.