ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜோனாதன் வெல்ஸ் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தனர். ஜோனாதன் வெல்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 58 ரன்களை குவித்தார். மேத்யூ ஷார்ட் 28 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசினார். இவர்கள் இருவரின் அதிரடியால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது. 

174 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி, 18வது ஓவரிலேயே வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பியூ வெப்ஸ்டெர் மட்டுமே சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்தார். இவரைத்தவிர தொடக்க வீரர் ஷான் மார்ஷ் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்னே அடித்தார். மற்றவர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 

அதனால் அந்த அணி 17.4 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி. அடிலெய்டு அணி சார்பில் அதிகபட்சமாக பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளையும் டிராவிஸ் ஹெட் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.