புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விமானத்தை விரட்டி தாக்கியபோது அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கி மீண்டார் கமாண்டர் அபிநந்தன். அப்போது அவரை இந்தியாவே ஹீரோவாகப் பார்த்தது. பாகிஸ்தானிலும் அபிநந்தன் பிரபலமானார். 

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை தொடரின் போட்டிக்காக இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை அவமானப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்று பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பாகிஸ்தான் - இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும்.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் 16ம் தேதி மான்செஸ்டரில் நடக்கும் 22வது போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது. இதற்கான பாகிஸ்தான் ஊடகத்தில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் வர்த்தமானை அசிங்கப்படுத்தும் விதமாக விளம்பரம் ஒன்று ஒளிபரப்படுகிறது. 

அந்த விளம்பரத்தில் அபிநந்தனை போல மீசை வைத்த தோற்றத்தில் இருப்பவரிடம், உங்களுடைய பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? டீ எப்படி இருக்கிறது? எனக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் அவர் டீ கப்பை எடுத்து செல்கிறார்.

 

அப்போது அவரது தோலில் கைவைத்து, ‘ கப்பை’ வைத்து விட்டு போ எனக் கூறுகிறார்கள். இந்த விளம்பரத்தின் மூலம்  கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தி, இந்திய அணி பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டது போலவும், அவர்கள் பாவம் பார்த்து இந்திய அணியை நடத்துவதாகவும், இறுதியில் கப் தங்களுடையது. எடுத்து விட்டு போக முடியாது. அப்படியே தப்பித்து போ’ என்கிற ரீதியில் கருத்து செல்வதாக அந்த விளம்பரத்தை ஒளிபரப்பி வருகிறார்கள். 

 

இது போல பாகிஸ்தான் ஊடகத்தில் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக விளம்பரம் ஒளிபரப்படுவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கராச்சியை சேர்ந்த டீ நிறுவனம், அபிநந்தனை கேலி செய்யும் விதமாக விளம்பரம் தயாரித்து ஒளிபரப்பியது. ஆனால் அதை விட ஹாட்டாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த கிரிக்கெட் தொடர்புடைய அபிநந்தனின் விளம்பரம்.