மேகாலயா மற்றும் மிசோரம் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மேகாலயா அணியில் த்வாரகா ரவி தேஜா மற்றும் அபய் நேகி ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். 

ரவி தேஜா 31 பந்தில் 53 ரன்கள் அடித்தார். ஆனால் அபய் நேகியோ ஒரு சில பந்துகளில் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டார். வெறும் 15 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடிய நேகி, 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். நேகி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் அடித்திருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 333.33 ஆகும். ரவி தேஜா மற்றும் அபய் நேகியின் அதிரடி அரைசதத்தால் மேகாலயா அணி 20 ஓவரில் 207 ரன்கள் அடித்தது. சையத் முஷ்டாக் அலி தொடரில் இதுதான் அதிவேக அரைசதம். 

208 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மிசோரம் அணியின் தொடக்க வீரர் தருவார் கோலி அதிரடியாக பேட்டிங் ஆடி 59 பந்தில் 90 ரன்களை குவித்தார். அந்த அணியின் கேப்டன் கேபி பவன் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். ஆனாலும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 182 ரன்கள் மட்டுமே அடித்தது மிசோரம் அணி. இதையடுத்து மேகாலயா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.