Asianet News TamilAsianet News Tamil

SL vs PAK முதல் டெஸ்ட்: அப்துல்லா ஷாஃபிக் அபார சதம்.! வெற்றியை உறுதி செய்த பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துவிட்டது.

abdullah shafique century almost confirms Pakistan win in first test against sri lanka
Author
Galle, First Published Jul 19, 2022, 8:03 PM IST

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ம் தேதி காலேவில் தொடங்கி நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் அடித்தது. இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் அரைசதம் அடிக்கவில்லை. ஓபனிங்கில் ஒஷாடா ஃபெர்னாண்டோ (35) மற்றும் பின்வரிசையில் மஹீஷ் தீக்‌ஷனா (38) ஆகிய இருவரும் சிறிய பங்களிப்பு செய்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தனி நபராக பொறுப்புடன் பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாபர் அசம் 119 ரன்களை குவித்தார். பாபரின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 218 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அடித்த 218 ரன்களில் 119 ரன்கள் பாபர் அசாம் அடித்தது. எஞ்சிய 99 ரன்கள் தான் மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து அடித்தது.

4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஃபெர்னாண்டோ 64 ரன்கள் அடித்தார். திமுத் கருணரத்னே (16) மற்றும் ரஜிதா (7) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். குசால் மெண்டிஸ் 76 ரன்கள் அடித்தார்.

அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வா (20), நிரோஷன் டிக்வெல்லா (12), ரமேஷ் மெண்டிஸ்(22), மஹீஷ் தீக்‌ஷனா(11) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த தினேஷ் சண்டிமால் 85 ரன்களுடன் களத்தில் நிற்க 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் அடித்திருந்தது இலங்கை அணி.

4ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கடைசி விக்கெட்டாக பிரபாத் ஜெயசூரியா ஆட்டமிழக்க 2வது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. 94 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்த தினேஷ் சண்டிமாலால் சதமடிக்க முடியவில்லை.

இதையடுத்து இலங்கை அணி மொத்தமாக 341 ரன்கள் முன்னிலை பெற, 342 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 87 ரன்களை சேர்த்தனர். இமாம் உல் ஹக் 35 ரன்னில் ஆட்டமிழக்க, அசார் அலி 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

104 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 3வது விக்கெட்டுக்கு அப்துல்லா ஷாஃபிக்கும் பாபர் அசாமும் இணைந்து 101 ரன்களை சேர்த்தனர். அப்துல்லா ஷாஃபிக் அபாரமாக ஆடி சதமடிக்க, பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பாபர் அசாம் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அப்துல்லா ஷாஃபிக் 112 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 7 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிந்தது. பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசிநாள் ஆட்டத்தில் வெறும் 120 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், கையில் 7 விக்கெட்டுகள் இருப்பதுடன், சதமடித்த அப்துல்லா ஷாஃபிக் களத்தில் இருப்பதால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios