விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து சாதனைகளின் நாயகனாக திகழ்ந்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை குவித்து முதலிடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். விராட் கோலி 70 சதங்களுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார். கோலி இன்னும் 5-7 ஆண்டுகள் வரை ஆடுவார் என்பதால், அவர் எளிதாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துவிடுவார். 

அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கரின் அதிகமான ரன்கள் என்ற சாதனையையும் கோலி தகர்க்க வாய்ப்புள்ளது. அதேபோல ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். சமகால கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான பவுலர் என்றால் அது பும்ரா தான். டி20, டெஸ்ட், ஒருநாள் என அனைத்துவிதமான போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள், பும்ராவை எதிர்கொள்ளவே நடுங்குகின்றனர். வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், துல்லியமான லைன் அண்ட் லெந்த் மற்றும் மிக துல்லியமான யார்க்கர் என அபாரமான பவுலராக பும்ரா வலம்வருகிறார். 

பும்ராவின் பவுலிங்கை தற்போதைய பேட்ஸ்மேன்கள் திறம்பட ஆடமுடியாததற்கு, சிறந்த பவுலர்களை எதிர்கொள்ளாததும் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிட்டதுமே காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். அதேபோல விராட் கோலி என்னதான் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் எல்லாம் ஒப்பிட முடியாது என்றும் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அப்துல் ரசாக், 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை கிரிக்கெட் ஆடிய வீரர்களிடம் கேளுங்கள்.. உண்மையான கிரிக்கெட் என்றால் என்னவென்று அவர்கள் சொல்லுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் பல தலைசிறந்த வீரர்கள் ஆடினார்கள். இப்போதெல்லாம் அந்தளவிற்கு உலகத்தரமான நிறைய வீரர்கள் கிடையாது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதிலுமே டெப்த் கிடையாது. எல்லாமே அடிப்படை லெவலில்தான் உள்ளது. 


 
விராட் கோலி தொடர்ச்சியாக சீராக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். அவர் சிறந்த வீரர் தான். ஆனால் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது. அவரது லெவலே வேறு. இப்போது என்னையே எடுத்துக்கொள்வோம். எனக்கு பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்வது பெரிய விஷயமே கிடையாது. பும்ராவின் பவுலிங்கை நான் எதிர்கொண்டால், பும்ரா உண்மையான அழுத்தத்தையும் நெருக்கடியையும் உணர்வார். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், மெக்ராத், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் போன்ற பவுலர்களை எதிர்கொண்டால், பேட்ஸ்மேனுக்கு தானாகவே நம்பிக்கை அதிகரித்துவிடும். எனவே எனக்கெல்லாம் பும்ரா குழந்தை பவுலர். அவர் மீது என்னால் எளிதாக ஆதிக்கம் செலுத்தி ஆடமுடியும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.