ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். ஃபின்ச் மற்றும் வார்னர் ஆகிய இருவருமே தொடக்கம் முதலே தாறுமாறாக அடித்து ஆடக்கூடியவர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஃபின்ச் தான் சிறந்த வீரராக திகழ்கிறார். 

ஃபின்ச்சின் அதிரடியான தொடக்கம், அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடித்தது. 143 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச், 25 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

இந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஃபின்ச் படைத்துள்ளார். ஃபின்ச் இன்று அடித்த 3 சிக்ஸர்களுடன் சேர்த்து மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 85 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். வார்னர் மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் 83 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். வார்னர் 73 போட்டிகளில் 83 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால் ஃபின்ச் வெறும் 55 போட்டிகளில் 85 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தை பிடித்துள்ளார்.