ஐபிஎல் 13வது சீசன் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்லை நடத்துவது ஏற்கனவே முடிவாகிவிட்டநிலையில், அதற்கான, இந்திய அரசாங்கத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. 

ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், வழக்கமாக 8 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 மணிக்கு தொடங்கி இரவு 11.30-12 மணி வரை போட்டி நடத்தப்பட்டதால் பார்வையாளர்களுக்கும் அது சிரமமாக இருந்த நிலையில், போட்டி அரைமணி நேரம் முன்னதாக தொடங்கப்படவுள்ளது. 

மாலையில் நடக்கும் போட்டிகள் பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கப்படவுள்ளன. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வரவேற்றுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் போட்டிகளை இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்பது நல்ல முடிவு. இந்தியாவில் நடக்கும்போதும், ஐபிஎல்லை 7.30 மணிக்கே தொடங்க வேண்டும். 8 மணிக்கு தொடங்கினால், போட்டி முடிய 11:45 ஆகிவிடுகிறது. அதனால் 7.30 மணிக்கு தொடங்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இந்தியாவில் நடக்கும்போதும் அதையே பின்பற்ற வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.