பிரெட் லீ-யின் ஸ்லோ யார்க்கரில் தான் அவுட்டான வீடியோவை கண்டு, தன்னைத்தானே கிண்டலடித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

இந்திய அணியின் 2003-2004 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகச்சிறப்பானது. அந்த சுற்றுப்பயணத்தில் 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடியது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன; 2 போட்டிகள் டிரா ஆகின. அதனால் தொடர் 1-1 என சமனடைந்தது.

அந்த தொடரில் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் இரட்டை சதம் அடித்தனர். டிராவிட் அடிலெய்டிலும், சச்சின் சிட்னியிலும் இரட்டை சதமடித்தனர். கங்குலி தலைமையில் இந்திய அணி அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அசத்தியது. 

அந்த தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடந்தது. அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்களை குவித்தார். விவிஎஸ் லட்சுமணன் தன் பங்கிற்கு 178 ரன்களை குவிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 705 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் அடிக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 43 ஓவர்கள் பேட்டிங் ஆடி 2 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் அடித்த நிலையில், 5 நாட்கள் முடிந்ததால், போட்டி டிரா ஆனது. 

அந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ராவை, பிரெட் லீ அருமையான ஸ்லோ யார்க்கரின் மூலம் கிளீன்  போல்டாக்கினார். சோப்ரா  45 ரன்களில் அவுட்டானார். கிரிக்கெட் ஒயர் பிரெட் லீ வீசிய அந்த பந்தின் வீடியோவை ஷேர் செய்திருந்தது.

அதைக்கண்ட ஆகாஷ் சோப்ரா, 100 தடவைக்கு மேல் இந்த வீடியோவை பார்த்துவிட்டேன். ஒரு அருமையான பந்தை எனக்கு வீசி வீணடித்துவிட்டார். அந்த பந்தை சச்சின் டெண்டுல்கருக்காக அவர் பாதுகாத்து வைத்து வீசியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா பதிவிட்டுள்ளார்.