ஐபிஎல் 2008ம் ஆண்டிலிருந்து நடந்துவருகிறது. இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி 2 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளும் கோப்பையை வென்றுள்ளன. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் தான் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை ஜெயிக்காத அணிகள்.

விராட் கோலி இந்திய அணியை மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக வழிநடத்தி, 64.64% என்ற வெற்றி விகிதத்துடன், இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் கோலி, ஐபிஎல்லில் வெற்றிகரமான கேப்டனாக திகழவில்லை. 

ஐபிஎல்லில் கேப்டனாக அவரது ரெக்கார்டு படுமோசமாக உள்ளது. 2011ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் கோலி. அதிலிருந்து இதுவரை கோலியின் கேப்டன்சியில் ஆர்சிபி அணி ஆடிய 110 ஐபிஎல் போட்டிகளில் 55 தோல்விகளையும் 49 வெற்றிகளையும் பெற்றுள்ளது. கோலியின் கேப்டன்சியில் ஆர்சிபி அணி பெற்ற வெற்றியைவிட தோல்விகள் தான் அதிகம். 

2016 ஐபிஎல் சீசனில் இறுதி போட்டி வரை சென்றது கோலி தலைமையிலான ஆர்சிபி அணி. மற்றபடி சொல்லுமளவிற்கு ஒன்றுமே செய்யவில்லை. 2017 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் லீக் சுற்று முடிவில், கடைசி இடத்தை பிடித்தது ஆர்சிபி அணி. அதுவும் டிவில்லியர்ஸ், கெய்ல், மிட்செல் ஸ்டார்க், ஷேன் வாட்சன் ஆகிய சிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்தும் கூட அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

இந்நிலையில், அதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல்லில் கோலி கண்டிப்பாக வெற்றிகரமான கேப்டன் இல்லை. ஆர்சிபி அணி சரியாக ஆடவில்லை என்பதுதான் உண்மை. ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் மட்டுமல்ல; நீண்ட காலமாகவே ஆர்சிபி அணி ஐபிஎல்லில் சரியாக ஆடவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அணி தேர்வு சரியில்லை. ஆர்சிபி அணி தேர்விலேயே தவறுகள் உள்ளன. அணி தேர்வில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும். சரியான வீரர்களை தேர்வு செய்வதில் ஆர்சிபி கோட்டைவிடுகிறது. அணி நிர்வாகத்தினர், அணி தேர்வில் மிகுந்த கவனத்துடன் சிறப்பாக செயல்பட வேண்டும்.

சிஎஸ்கே கேப்டன் தோனி, அணி நிர்வாகத்திடம் 3-4 வீரர்களை பரிந்துரைப்பார். மற்றதையெல்லாம் அணியின் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்தினர் பார்த்துக்கொள்கின்றனர். அதுமாதிரியான ஒரு சிறந்த சப்போர்ட் ஆர்சிபி அணியில் கோலிக்கு கிடைக்கவில்லை. கேப்டன் கோலியே நேரடியாக வந்து ஏலத்தில் உட்கார முடியாது. அணி நிர்வாகம் தான் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் ஒரு கேப்டனுக்கு கொடுக்கும் சிறந்த ஒத்துழைப்பாக இருக்கும். ஆனால் அது கோலிக்கு கிடைக்கவில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.