கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறந்து விளங்கும்  ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதுமே கிராக்கிதான். அதுபோன்ற ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு, ஒரு அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

கபில் தேவ், இம்ரான் கான், ஜாக் காலிஸ், ஃப்ளிண்டாஃப் ஆகியோர் சிறந்த ஆல்ரவுண்டர்கள். குறிப்பாக ஃபாஸ்ட் பவுலிங் - பேட்டிங் ஆல்ரவுண்டர்களுக்கான மதிப்பே தனி தான். அவர்கள் ஒரு அணிக்கு மிக முக்கியமானவர்கள். ஸ்பின் பவுலிங் வீசும் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருந்தாலும் அவரும் முக்கியமானவர் தான்.

சமகால கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ரோஸ்டான் சேஸ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஷகிப் அல் ஹசன், கிறிஸ் மோரிஸ், காலிங்வுட் உள்ளிட்ட பல சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். 

இந்நிலையில், சமகாலத்தின் பெஸ்ட் 3 ஆல்ரவுண்டர்கள் யார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தான் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் 2019 உலக கோப்பை இறுதி போட்டியில் தனி ஒருவனாக போராடி உலக கோப்பையை இங்கிலாந்து அணி முதல் முறையாக வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர். ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியிலும் தனி ஒருவனாக இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்று கொடுத்தார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இங்கிலாந்து அணிக்காக உச்சபட்ச பங்களிப்பை செய்து வெற்றிக்கு உதவுபவர் பென் ஸ்டோக்ஸ். 

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 176 ரன்களை குவித்தார் பென் ஸ்டோக்ஸ். 

மேலும் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் மற்றும் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சிறந்த ஆல்ரவுண்டர்கள் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.