இலங்கைக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை. கேஎல் ராகுல் காயம் காரணமாக ஆடவில்லை. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 2 சீனியர் வீரர்களும் கம்பேக் கொடுத்துள்ளனர். பும்ரா தான் துணை கேப்டன்.
ரிஷப் பண்ட் இல்லாததால் சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் இஷான் கிஷன் தான் முதன்மை விக்கெட் கீப்பராக ஆடுவார். சஞ்சு சாம்சனுக்கு பேட்ஸ்மேனாக ஆட வேண்டுமானால் வாய்ப்பு கொடுக்கப்படலாம்.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று லக்னோவில் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, அதில் சஞ்சு சாம்சனை விடுவித்துள்ளார்.
இந்திய பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, இஷான் கிஷனுடன் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும். சஞ்சு சாம்சனை ஏன் இறக்கக்கூடாது? என்ற கேள்வி எழலாம். இஷான் கிஷன் ஏற்கனவே 3 போட்டிகளில் ஓபனிங்கில் இறங்கி ஆடியிருக்கிறார். எனவே 3 போட்டிகளில் அவரை ஒதுக்கினால் அது சரியாக இருக்காது. அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இஷான் கிஷனுடன் ருதுராஜ் கெய்க்வாட் தான் தொடக்க வீரராக ஆடவேண்டும். ருதுராஜுக்கு 3 டி20 போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்க வேண்டும். ரோஹித் சர்மா 3ம் வரிசையிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4ம் வரிசையிலும், தீபக் ஹூடா 5ம் வரிசையிலும் ஆடவேண்டும்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாம்சனை 5ம் வரிசையில் இறக்கமுடியாது. டாப் ஆர்டரிலும் அவருக்கு இடமில்லை. எனவே சாம்சனுக்கு வாய்ப்பில்லை. 6ம் வரிசையில் வழக்கம்போலவே வெங்கடேஷ் ஐயரையே இறக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
