தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுடன் சீனியர் வீரரான ஷிகர் தவானை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளாததால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் ஒருநாள் அணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணிக்காக 145 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6105 ரன்களை குவித்துள்ள ஷிகர் தவான், வெள்ளைப்பந்து அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக ஆடிவருகிறார். இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் என பல இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். எனவே ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைப்பது சந்தேகமாக இருந்த நிலையில், ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்க தொடரில் ஆடாததால், ஷிகர் தவானுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
இந்திய ஒருநாள் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
இந்திய ஒருநாள் அணியில் தவான் மீண்டும் இடம்பிடித்துள்ள அதேவேளையில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் இடம்பெற்றிருப்பதால், ராகுலுடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுடன் சீனியர் வீரரான ஷிகர் தவான் தான் தொடக்க வீரராக இறங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
