டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் யார் இறங்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் மிகத்தீவிரமாக தயாராகிவருகின்றன. குறிப்பாக, ஐசிசி கோப்பையை வென்றிராத கேப்டன் என்ற விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்வதில் மிகத்தீவிரமாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதற்கு, மிகச்சிறந்த ஆடும் லெவனை களமிறக்க வேண்டியது அவசியம். இந்திய அணியில் திறமைகளுக்கு பஞ்சமில்லை. அபரிமிதமான அளவுக்கு அதிகமான திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களில் மிகச்சிறந்த 11 பேருடன் களமிறங்க வேண்டும். 

கிட்டத்தட்ட இந்திய அணியின் சிறப்பான ஆடும் லெவன் காம்பினேஷன் உறுதியாகிவிட்ட நிலையிலும், தொடக்க வீரராக ரோஹித்துடன் யார் இறங்குவார் என்பது குறித்த விவாதம் நடக்கிறது. டி20 கிரிக்கெட்டில் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கிவந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கிய கோலி, அவரே டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கவிருப்பதாக தெரிவித்தார்.

ஷிகர் தவான், பிரித்வி ஷா ஆகிய தொடக்க வீரர்களும் வரிசையில் உள்ளனர். இந்நிலையில், ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, ரோஹித்துடன் ராகுலே தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோலி 3ம் வரிசையிலேயே இறங்கலாம். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் இருப்பதால் ராகுல் மிடில் ஆர்டரில் ஆட வேண்டிய அவசியமில்லை. எனவே ராகுலே தொடக்க வீரராக இறங்கலாம். கோலி வழக்கம்போல அவரது 3ம் வரிசையிலேயே ஆடலாம் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.