வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குவதாக இருந்த டி20 உலக கோப்பை தொடர் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பையை ஒத்திவைப்பதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனவே ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகிவிட்டது. ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருந்த பிசிசிஐ, ஐபிஎல்லை நடத்தும் பணிகளை தொடங்கிவிட்டது. 

ஐபிஎல் செப்டம்பர் 26ம் தேதியிலிருந்து நவம்பர் 7ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லை முடிந்தவரை இந்தியாவில் நடத்துவதே எண்ணம் என்றும், முடியாத பட்சத்தில் கடைசி வாய்ப்பாகத்தான் வெளிநாட்டை பற்றி யோசிக்கவுள்ளதாக ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் செப்டம்பர் இறுதியில் தொடங்குவதாக இருந்தால், இந்தியாவில் நடத்துவது கண்டிப்பாக கஷ்டமான காரியம். அதற்கு வாய்ப்பு மிகக்குறைவு. ஏனெனில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில், இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான். இந்தியாவில் நடத்தப்படவில்லையென்றால், கண்டிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறும். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடப்பதன் சாதக, பாதகங்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் அலசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பத்தை தாக்குப்பிடிப்பது வீரர்களுக்கு கடினமான காரியமாக இருக்கும். ஆனால் செப்டம்பர் - நவம்பர் காலக்கட்டத்தில் கொஞ்சம் வெப்பத்தின் தாக்கம் பரவாயில்லாமல் இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் வெப்பநிலை வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.

பேட்டிங் கண்டிஷன்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. யு.ஏ.இ-யில் ஐபிஎல் நடப்பது சில அணிகளுக்கு ஆறுதலாக இருக்கும். பவுலிங் யூனிட் சிறப்பாக இல்லாத அணிகளுக்கு சாதகம். ஏனெனில் மைதானங்கள் பெரியவை என்பதால், சிறப்பான பவுலிங் யூனிட்டை பெற்றிருக்காத அணிகளில், அதன் தாக்கம் பெரியளவில் இருக்காது. அதனால் பவுலிங்கில் பலவீனமாக இருக்கும் ஆர்சிபி அணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடப்பது சாதகமாக இருக்கும். அந்த அணி இந்த முறை வெற்றிகரமாக திகழும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

ஆர்சிபி அணியில் எப்போதுமே பேட்டிங் ஆர்டர் சிறப்பாகவே இருந்துள்ளது. குறிப்பாக கோலியும் டிவில்லியர்ஸும் அணியில் இருப்பதால், வேறு எந்த வீரரும் சரியாக ஆடவில்லையென்றாலும், இவர்கள் இருவரில் ஒருவர் ஆடினாலே ஆர்சிபி வெற்றி பெற்றுவிடும். அந்தவகையில், அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் சிறந்தது. ஆனால் அந்த அணியால் பெரியளவில் சாதிக்க முடியாததற்கு பவுலிங் யூனிட் சிறப்பாக இல்லாததுதான் காரணம். எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடந்தால், ஆர்சிபியின் பலவீனம் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 

அதேபோல நல்ல ஸ்பின்னர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடப்பது சந்தோஷமான விஷயமாகத்தான் இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.