இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடர் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் தொடர்.

கடந்த 2018ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கடந்த முறை வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித், வார்னர், லபுஷேன் ஆகியோர் ஆடுவது கூடுதல் பலம். இந்திய அணியும் நல்ல பலம்வாய்ந்த அணியாக இருப்பதால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக தனக்கான இடத்தை பிடித்துவிட்ட நிலையில், ஆடும் லெவனில் பிரித்வி ஷா இடம்பெறுவாரா என்பது சந்தேகமாகவுள்ளது. அதேபோல விக்கெட் கீப்பராக சஹா - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் எடுக்கப்படுவார், ஸ்பின்னர் யார் ஆகிய பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு எழும். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய இருவருக்குமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றே நான் நினைக்கிறேன். இப்போதைக்கு ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் எடுக்கப்பட வாய்ப்பில்லை. முதுகுப்பிரச்னையால் தவித்த ஹர்திக் பாண்டியா, இன்னும் பந்துவீச தொடங்கவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் சமீபத்தில் ஆடவில்லை. எனவே டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆட வாய்ப்பில்லை. 

அதேபோல அஷ்வின், குல்தீப் ஆகியோர் இருப்பதால் ஜடேஜாவிற்கு அணியில் வாய்ப்பு இருக்காது. குல்தீப் யாதவ் ரிஸ்ட் ஸ்பின்னர். கடந்த முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். அஷ்வின் இருக்கிறார். எனவே ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைக்காது. அதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார்.