6 ஓவர் பேட்டிங் ஆடுவார் என்றுகூட நம்பவில்லை என்றால், பொல்லார்டை ஏன் ஆடவைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் அதேவேளையில், பலமுறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இன்று மும்பை இந்தியன்ஸ் அணி அதன் 4வது போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி செய்யும் தவறு ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராகவும் நட்சத்திர வீரராகவும் பல ஆண்டுகளாக இருந்துவருபவர் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்டு. ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இல்லாத நிலையிலும் கூட, பொல்லார்டு மிகவும் பின்வரிசையில் பேட்டிங் இறக்கப்படுகிறார். 15வது ஓவராக இருந்தால்கூட, அவரை இறக்காமல் கடைசி நேரத்தில் தான் மும்பை அணி களமிறக்குகிறது. அதைத்தான் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, பொல்லார்டு எதிரணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கக்கூடிய அபாயகரமான வீரர். எனவே அவரை பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் மேலே இறக்கிவிட வேண்டும். அவரது திறமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவரை மிகக்குறைவாக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்துகிறது என்று நினைக்கிறேன். அவரால் 6 ஓவர்கள் பேட்டிங் ஆடமுடியும் என்று கூட நம்பவில்லை என்றால், பிறகு அவரை ஏன் ஆடவைக்கிறீர்கள்? அவர் மீது நம்பிக்கை இருந்தால், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ் ஆகியோரை எதிர்கொள்ள விடுங்கள். ஆட்டத்தை மாற்றவல்ல திறமைசாலி அவர். மிடில் ஓவர்களில் அவர் பேட்டிங் ஆடினால், டெத் ஓவர்களில் மிரட்டலாக முடிப்பார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.