ஐபிஎல் 13வது சீசன் வரும் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்னையால், சீனாவுடனான வர்த்தகத்தை பெருமளவில் குறைத்துக்கொண்டது இந்தியா. எனவே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனமான விவோவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நெருக்கடி பிசிசிஐ-க்கு உருவானது. இதையடுத்து விவோவுடனான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 

புதிய டைட்டில் ஸ்பான்சரை தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு நேற்று(14ம் தேதி) வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜியோ, டாடா, பைஜூஸ், பதஞ்சலி மற்றும் அன் அகாடமி ஆகிய 5 நிறுவனங்கள் மட்டும்தான், கால அவகாசத்திற்குள் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. 

இதில் டாடா நிறுவனம் தான் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. ரூ.300 கோடி என்ற குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயித்திருந்தது பிசிசிஐ. இந்நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளிலும் ஸ்பான்ஸராக இருக்கும் ஜியோ, ஐபிஎல் போட்டிகளின்போது அதிகமாக விளம்பரங்களும் செய்யும். எனவே ஜியோ, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸருக்கான போட்டியில் இருந்தாலும், அதை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. 

அதேபோல பைஜூஸ் நிறுவனம், இந்திய அணிக்கான ஜெர்சி ஸ்பான்ஸர். எனவே ஐபிஎல் ஸ்பான்ஸரையும் பெறுவது அந்த நிறுவனத்துக்கு கூடுதல் நெருக்கடியாகவே அமையும் என பார்க்கப்படுகிறது. எனவே பைஜூஸும் பெரியளவில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை. பதஞ்சலி, அன் அகாடமி ஆகிய நிறுவனங்களை விட டாடா தான் இதை பெறுவதில் பெரும் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. 

இந்தியாவின் தொழில் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது டாடா குழுமம். பாரம்பரியமும் நன்மதிப்பும் பெற்ற நிறுவனம். டாடா நிறுவனம், ஐபிஎல்லில் ஒரேயொரு ஸ்பான்ஸர்ஷிப்பை மட்டுமே ஏற்கவே பெற்றுள்ளது. எனவே டைட்டில் ஸ்பான்ஸர் நிறுவனத்துக்கு உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது. அதனால் டாடா தான், டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை பெறுவதில் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்துக்கே கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.