Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் தகர்க்க முடியாத 5 சாதனைகள்

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 5 அசைக்கமுடியாத சாதனைகள் குறித்து பார்ப்போம்.
 

5 amazing records hold by dhoni in international cricket
Author
Chennai, First Published Aug 15, 2020, 10:15 PM IST

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டனானதுமே நடந்த பெரிய தொடரான டி20 உலக கோப்பையை 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி, அதன்பின்னர் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்துவிதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். 

2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியிலிருந்து விலகி, ஆனால் அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் இருந்த தோனி, ஐபிஎல்லில் ஆடவுள்ளார். ஐபிஎல்லுக்கான பயிற்சி முகாமில் சென்னையில் இருக்கும் தோனி, திடீரென இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4876 ரன்களை அடித்துள்ளதுடன், 256 கேட்ச்களையும் 38 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,773 ரன்களை குவித்துள்ளார். மேலும் 321 கேட்ச்களையும் 123 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் தோனி. 

பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் சர்வதேச கிரிக்கெட்டில் அபார சாதனைகளை படைத்துள்ளார். தோனி ஓய்வு அறிவித்துள்ள இந்த வேளையில், அவரது அபாரமான 5 சாதனைகளை பார்ப்போம்.

1. 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன்

டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

2. அதிகமான சர்வதேச போட்டிகளில் கேப்டன்சி செய்த கேப்டன் தோனி:

தோனி 200 ஒருநாள், 60 டெஸ்ட் மற்றும் 72 டி20 போட்டிகளில் என மொத்தமாக 332 சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனைக்குரியவர் தோனி. 324 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டன்சி செய்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இரண்டாமிடத்தில் உள்ளார்.

3. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான ஃபைனல்களை வென்ற கேப்டன் தோனி

தோனி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், பல நாடுகள் கலந்துகொண்ட 6 ஒருநாள் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனி, அவற்றில் 4 ஃபைனல்களில் வென்று கோப்பையை வென்று கொடுத்தார். 

4. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமான நாட் அவுட்டுகள்

தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் களமிறங்கிய போட்டிகளில் 84 முறை கடைசி வரை அவுட்டாகாமல் நாட் அவுட்டாக இருந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் அதிகம். தோனிக்கு அடுத்த இடத்தில் ஷான் போலாக்(72 நாட் அவுட்) இருக்கிறார்.

5. சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான ஸ்டம்பிங்:

ஒருநாள் கிரிக்கெட்டில் 123, டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 மற்றும் டி20 கிரிக்கெட்டில் 34 என சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 195 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார் தோனி. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி தன்னகத்தே கொண்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios