1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகள் கழித்து 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று அசத்தியது. 

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரசிகர்களின் 28 ஆண்டுகால தவிப்பை கலைந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றியது தோனி தலைமையிலான இந்திய அணி. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, முதல் முறையாக உலக கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்தது. 

அதன்பின்னர் 28 ஆண்டுகள் கழித்து ரிக்கி பாண்டிங் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணியை காலிறுதியிலும் பாகிஸ்தான் அணியை அரையிறுதியிலும் வீழ்த்தி பக்கா டீம் பெர்ஃபார்மன்ஸால் அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து இறுதி போட்டிக்கு சென்ற இந்திய அணி, இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

அந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், முனாஃப் படேல் என அனைவருமே சிறப்பாக ஆடி, ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உதவினர். 

2011 உலக கோப்பை என்றாலே சச்சின் டெண்டுல்கர், ஃபைனலில் தோனி அடித்த சிக்ஸர், தொடர் நாயகன் யுவராஜ் சிங் என்கிற குறுகிய வட்டத்திலேயே ரசிகர்களின் சிந்தனையும் சரி.. அந்த உலக கோப்பை குறித்த நினைவுகளும் சரி.. சுருக்கப்பட்டுவிட்டது. 

ஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு தொடர் முழுவதுமே அபாரமாக ஆடிய சேவாக், கம்பீர், முனாஃப் படேல் ஆகியோரை யாரும் பெரிதாக கண்டுகொள்வதுமில்லை. அவர்களின் பங்களிப்புகள் குறித்து பேசுவதுமில்லை. 

1. கவுதம் கம்பீர்

இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தபோதிலும், அப்போதைய இளம் வீரர் கோலியுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்ததுடன், 97 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர் தான். ஆனால் தோனி அதன்பின்னர் 91 ரன்களை அடித்து சிக்ஸர் விளாசி போட்டியை முடித்துவைத்ததால் கம்பீரின் முக்கியமான இன்னிங்ஸை விட, தோனியின் இன்னிங்ஸை அனைவரும் புகழ ஆரம்பித்துவிட்டனர். 

ஆனால் கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அதுமட்டுமல்லாமல் அந்த உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கருக்கு(481 ரன்கள்) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்திருந்தது கம்பீர் தான். 4 அரைசதங்கள் உட்பட 393 ரன்களை குவித்து, உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

2. சேவாக்

2011 உலக கோப்பையில் சேவாக் அருமையாக ஆடினார். இறுதி போட்டி உட்பட ஒருசில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அருமையாக ஆடினார். வங்கதேசத்துக்கு எதிராக சேவாக் அடித்த 175 ரன்கள் தான், அந்த உலக கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். அந்த உலக கோப்பையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம், இந்திய அணி நல்ல ஸ்கோரை அடிக்க காரணம், சச்சினுடன் இணைந்து சேவாக் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததுதான். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் கூட அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை சேவாக் அமைத்து கொடுத்திருந்தார். 2011 உலக கோப்பையில் சச்சின், கம்பீருக்கு அடுத்து அதிகபட்ச ஸ்கோர் அடித்தது சேவாக் தான். அந்த உலக கோப்பையில் 380 ரன்களை குவித்திருந்தார்.

3. முனாஃப் படேல்

2011 உலக கோப்பையில் ஜாகீர் கானுக்கு அடுத்து, கேப்டன் தோனியின் நம்பிக்கைக்குரிய ஃபாஸ்ட் பவுலராக முனாஃப் படேல் திகழ்ந்தார். முனாஃப் படேலின் இருப்பு, அணிக்கு நல்ல பேலன்ஸை அளித்தது. 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முனாஃப் படேல். வங்கதேசத்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முனாஃப் படேல், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முகமது ஹஃபீஸின் விக்கெட்டையும், முக்கியமான நேரத்தில் அப்துல் ரசாக்கின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அவரது ஸ்பெல் அந்த போட்டியில் முக்கியமானதாக அமைந்தது.