உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன. 

சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஷோயப் மாலிக், ஹஃபீஸ் போன்ற அனுபவ வீரர்கள் மற்றும் ஃபகார் ஜமான், ஷாஹீன் அஃப்ரிடி போன்ற இளம் வீரர்கள் என அனுபவ மற்றும் இளம் வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான அணியாக திகழ்கிறது. 

இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை, 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு முக்கியமான தொடர்களை பாகிஸ்தான் வென்றுள்ளது. எனவே இங்கிலாந்து கண்டிஷனில் பாகிஸ்தான் நன்கு ஆடக்கூடிய அணி என்பதால் அந்த அணிக்கான வாய்ப்பும் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துமுடிந்த ஒருநாள் தொடரில் 4 போட்டியிலும் தோற்று பாகிஸ்தான் அணி ஒயிட்வாஷ் ஆகியிருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அசால்ட்டாக அடித்தது. பாகிஸ்தான் அணியில் பேட்டிங் சிறப்பாகவே உள்ளது. பவுலிங்கும் ஃபீல்டிங்கும்தான் மிக மோசம். உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் ஆடியது அந்த அணிக்கு நல்லதாக போயிற்று. சரியாக ஆடாத வீரர்களை நீக்கிவிட்டு உலக கோப்பை அணியில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது பாகிஸ்தான் அணி. 

அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் நீக்கப்பட்டு முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

உலக கோப்பைக்கான மாற்றம் செய்யப்பட்ட புதிய பாகிஸ்தான் அணி:

சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், ஆசிஃப் அலி, பாபர் அசாம், ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிடி, வஹாப் ரியாஸ், முகமது ஹாஸ்னைன்.