கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் முதல் ஜூன் வரை எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்காமல் இருந்த நிலையில், ஜூலை முதல் கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கியுள்ளன.

இங்கிலாந்து -  வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்து இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், இதற்கிடையே அடுத்த மாதம், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

செப்டம்பர் 4-செப்டம்பர் 16 வரை இந்த தொடர் நடக்கிறது. முதலில் டி20 தொடரும் அதன்பின்னர் ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளன. இந்த 2 தொடர்களுக்கும் சேர்த்து 21 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான அணியில் கடந்த ஓராண்டாக ஆடாத மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகியோருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. உலக கோப்பைக்கு பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலிய அணியில் ஆடவில்லை. அதேபோல, மன இறுக்கம் காரணமாக ரிலாக்ஸ் ஆவதற்காக ஒரு சிறு பிரேக் எடுத்துக்கொண்ட மேக்ஸ்வெல்லும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.

ஜோஷ் ஃபிலிப், டேனியல் சாம்ஸ் மற்றும் ரிலீ மெரிடீத் ஆகிய மூவரும் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான 21 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), சீன் அபாட், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ரிலீ மெரிடித், ஜோஷ் ஃபிலிப், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.