வீட்டின் நுழைவாயில் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி முக்கியமான பகுதியாகும். இந்த நுழைவாயிலில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தேச மங்கையர்க்கரசி அளித்துள்ள விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

கண் திருஷ்டி நீங்க நுழைவாசலில் வைக்க வேண்டிய பொருள்

நமது வீட்டின் நுழைவாயில் என்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் இடமாக கருதப்படுகிறது. ஆனால் வீட்டிற்கு வரும் பலரும் எதிர்மறை ஆற்றல் உடன் வீட்டிற்குள் நுழைகின்றனர். இந்த எதிர்மறை ஆற்றல்களை நுழைவாயிலையே தடுத்து நிறுத்துவதற்கு சில மங்கலப் பொருட்களை வீட்டின் நுழைவாயிலில் வைப்பது வழக்கம். இது போன்ற மங்கலப் பொருட்களை வைப்பதற்கான நோக்கம் வீட்டிற்குள் வரக்கூடியவர்களுக்கும், வீட்டிற்குள் வாழக்கூடியவர்களுக்கும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்துவதே ஆகும். வீட்டு வாசலில் அஷ்ட மங்கலப் பொருட்களை வைக்கலாம். அஷ்ட மங்கலப் பொருட்களை வைக்க முடியாதவர்கள் அதில் முக்கியமாக விளங்கும் கண்ணாடியை வைக்கலாம்.

நுழைவாசலில் கண்ணாடி வைப்பதன் அவசியம்

கோயில்களில் இறைவனுக்கு தீபாரதனை காட்டி விட்டு சாமரம் வீசி கண்ணாடி காண்பிப்பது வழக்கம். அந்த அளவிற்கு கண்ணாடிக்கு முக்கியத்துவம் உண்டு. கண்ணாடிக்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சக்தி உண்டு. வீட்டிற்குள் நுழையும் பொழுது கண்ணாடி மட்டுமல்லாமல் பூரண கும்பம், உருளி, வாழைமரம், தோரணம், உப்பு, மஞ்சள், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வைக்கலாம். ஆனால் கண்ணாடி வைப்பது மிகுந்த சிறப்பாகும். இது வீட்டிற்கு வருபவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அது மாறி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். தன்னுடைய பிம்பத்தை கண்ணாடியில் ஒரு முறை பார்த்து விட்டால் அவர்களிடமிருந்த எதிர்மறை சிந்தனைகள் விலகி நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டிற்கு வரும் அனைவரும் நல்ல எண்ணத்துடன் வருவார்கள் என்பது நமக்கு தெரியாது. எனவே கண்ணாடியை நுழைவாசலில் வைப்பதன் மூலம் அவர்களின் எதிர்மறை எண்ணங்களை விலக்க முடியும்.

செருப்புகளை மறைவான இடத்தில் வைக்க வேண்டும்

கண்ணாடியை மாட்ட வாய்ப்பு இல்லாதவர்கள் விநாயகர் படம் வைக்கலாம். ஆனால் கண்ணாடி என்பது மிகவும் முக்கியமானது. முயன்றவரை கண்ணாடியை வைக்க வேண்டும். கண்ணாடியை வைப்பதன் மூலம் திருஷ்டிகள் ஏற்படாது. வீட்டில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும். அதே போல் வீட்டு வாசலில் செருப்புகளை இடுதல் கூடாது. செருப்புகளை மறைவான இடங்களில் வைக்க வேண்டும். கதவுகளுடன் கூடிய செருப்பு வைக்கும் பலகைகளை வாங்கி அதில் செருப்புகளை அடுக்கி கதவுகளை மூடி விட வேண்டும். எப்பொழுதும் வாசலை கூட்டி கோலமிட்டு மஞ்சள், குங்குமம் வைத்து விளக்கு ஏற்றி தோரணம் கட்டி இருக்க வேண்டும். வாசலில் குப்பை, பழைய பேப்பர்கள், பழைய சாமான் போன்ற பொருட்களை அடுக்கி வைத்தல் கூடாது. ஒரு வேளை உங்களிடம் செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் மட்டும் இருந்தால் அதை பழைய துணி கொண்டு மூட வேண்டும் என்று தேச மங்கையர்கரசி கூறியுள்ளார்.

நுழைவாயிலில் வைக்க வேண்டிய பொருட்கள்

கண்ணாடி மட்டுமல்லாமல் வீட்டின் நுழைவாயிலில் பிற பொருட்களையும் வைப்பதன் மூலமாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம். மா இலைகள், பூக்கள், வேப்பிலைகளால் செய்யப்பட்ட தோரணங்களை நுழைவாயிலில் தொங்கவிடலாம். இது மங்களகரமானதுடன் தீய சக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமலும் தடுக்கிறது. நுழைவாயிலின் இருபுறமும் அழகான மலர்ச் செடிகள் கொண்ட தொட்டிகளை வைக்கலாம். துளசிச்செடி, மல்லிகை, ரோஜா போன்ற நேர்மறை ஆற்றல்களை இருக்கும் செடிகளை வைக்கலாம். நுழைவாயிலில் விநாயகர் சிலைகளை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிலையை உள்நோக்கி இருக்கும்படி வைக்கலாம். மாலை நேரத்தில் வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் விசேஷம். இது இருளை நீக்கி நல்ல சக்திகளை வீட்டிற்குள் அழைக்கும். அதே போல் குலதெய்வ புகைப்படங்களையும் நிலை கண்ணாடியையும் வைக்கலாம்.

நுழைவாயிலில் வைக்கக் கூடாத பிற பொருட்கள்

நுழைவாயிலில் உடைந்த பொருட்கள், செருப்புகள், தூசி படிந்த பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது தரித்திரத்தை உண்டாக்கலாம். முட்கள் நிறைந்த செடிகளான கள்ளிச் செடிகள், கற்றாழை போன்றவற்றை நுழைவாயிலில் வைப்பது குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை அதிகரிக்கலாம். கிழிந்த, அழுக்கான கால் மிதியடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். சுத்தமான புதிய மிதியடிகளை வைக்க வேண்டும். வீட்டின் வாசலில் போர் காட்சிகள், துக்கமான படங்கள், ரத்தம் தொடர்பான படங்களை வைக்கக் கூடாது. குப்பைத் தொட்டியை வீட்டிற்கு பின்புறம் வைக்க வேண்டும். நுழைவாயிலுக்கு அருகில் வைக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கலாம் நுழைவாயிலை எப்போதும் சுத்தமாகவும், வெளிச்சமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இது வீட்டிற்குள் நல்ல அதிர்வுகளை ஈர்த்து அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும்.