விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி விரதமிருந்து விநாயகரை வழிபட வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எந்தவொரு காரியத்தையும் செய்யும் முதன் முதலில் விநாயகரை வழிபட்டு, பிறகு செய்வது தான் நம்முடைய வழக்கத்தில் உள்ளன. அதுபோல 'பிள்ளையார் சுழி' போட்டு எழுதும் எழுத்துக்களுக்கு உகந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே தான் விநாயக பெருமானை 'மூல கணபதி' என்று அழைக்கிறோம்.
விநாயகருக்கு உகந்த மாதம் ஆவணி மாதம் ஆகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை தான் 'விநாயகர் சதுர்த்தி'யாக' நாம் கொண்டாடுகிறோம். அந்நாளில் விரதமிருந்து, அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலையிட்டு விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டால் எல்லாவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தியானது நாளை மறுநாளாகும். அதாவது புதன்கிழமை (ஆகஸ்ட்.27) ஆகும். இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு விநாயகர் படத்தின் முன் அமர்ந்து வழிபாடுகளை தொடங்க வேண்டும். என் சங்கடங்கள் அனைத்தையும் நீயே தீர்க்க வேண்டும் என்று விநாயகரை மனதார நினைத்து பூஜையை தொடங்க வேண்டும். குறிப்பாக எந்தவித தடைகளும் இல்லாமல் அருள் புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
விரதமிருந்து வழிபாடு செய்ய நினைப்பவர்கள் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தத்காகும். முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் படம் அல்லது சிலையை வைத்து மஞ்சள், சந்தனம், குங்குமம், மலர்கள் கொண்டு அலங்கரித்து வழிபாடு செய்யலாம்.
மாலை வேளையில் விநாயகருக்கு பிடித்த நெய், சர்க்கரை சேர்த்த கொழுக்கட்டையும், சுண்டலும் தயாரித்து நிவேதனம் செய்து வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருப்பது ரொம்பவே நல்லது அப்படி முடியாதவர்கள் பால் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
தரித்திரம் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று ஏழை எளியோருக்கு குடை, காலணிகள், மாடு என உங்களது சக்திக்கேற்றவாறு அன்தானம் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய வரங்களை தருவார் விநாயகப் பெருமான்.
விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க மறக்காதீர்கள்.
விநாயகர் சதுர்த்தி விரத பலன்கள் :
- கல்வி அறிவு, தெளிந்த ஞானம், நிறைய செல்வம் போன்றவற்றை அருள்வார் விநாயகர்.
- காரியங்கள் கைகூடும்
- துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பெறுவீர்கள்
- சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வீர்கள்
- தீய சக்திகள் அண்டாது
- மன அமைதி நிலவும்
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
