இன்று வரலட்சுமி விரதம். வீட்டில் 16 வகை செல்வம் பெற எப்படி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
இந்த 2025 ஆம் ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் இன்று (ஆக. 08) ஆகும். வரலட்சுமி விரதம் என்பது ஆடி மாதம் வளர்பிறையில் வரும் விரதமாகும். இந்த விரதம் மகாலட்சுமி தேவிக்கு விருப்பமான விரதமாகும். ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் வரலட்சுமி விரதத்தை இருக்கலாம். ஆனாலும் பெண்கள் மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுவதால் அவர்கள் வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்வது கூடுதல் விசேஷமாக கருதப்படுகிறது. இந்நாளில் மகாலட்சுமி தேவியை எளிமையாக வழிபட்டால் கூட அவள் அதை ஏற்று அருள்புரிவால் என்பது நம்பிக்கை. மேலும் லட்சுமி தேவிக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது இன்னும் விசேஷமாகும்.
வரலட்சுமி விரதமும்! வெள்ளிக்கிழமையும்!
பொதுவாகவே வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தேவிக்கு உரிய தினம். இந்நாளில் லட்சுமி தேவியை முறையாக வழிபட்டு பூஜை செய்து வந்தால் லட்சுமி தேவியின் அருள் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமை வரும் வரலட்சுமி விரதம் அன்று லட்சுமி தேவியை மனதார வழிபட்டு பூஜை செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். குறிப்பாக வீட்டில் 16 வகையான செல்வங்களும் நிறையும்.
வரலட்சுமி விரதம் இருக்கும் முறை:
இரண்டு முறைகளில் வரலட்சுமி விரத வழிபாட்டினை செய்யலாம். வருடதோறும் வழக்கமாக விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் வீட்டில் கலசம் வைத்து, நோன்பு சரடு கட்டி விரதம் இருக்கலாம். இரண்டாவது நீங்கள் புதிதாக வரலட்சுமி விரதம் இருக்கப் போகிறீர்கள் என்றால் மகாலட்சுமி தேவியின் படத்தை வைத்து வழிபட வேண்டும். மேலும் வீட்டு வாசலில் மாங்கோலம் போட்டு லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைத்து வழிபடலாம்.
செல்வம் பெற ஏற்ற வேண்டிய விளக்கு!
வரலட்சுமி விரதம் நாளில் லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைத்து வழிபாடு செய்யும்போது முதலில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் 16 வகையான செல்வங்களும் நிலைத்து இருக்கும். குறைவில்லாமல் மகாலட்சுமியின் அருளும் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
இன்று நீங்கள் விளக்கை எந்த நேரத்தில் ஏற்றினாலும் மாலையில் கண்டிப்பாக வீட்டின் பூஜை அறையில் ஒரு விளக்கை கண்டிப்பாக ஏற்றி வைக்க வேண்டும். பிறகு லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பாக ஒரு தட்டில் ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மொச்சை, பச்சரிசி பரப்பி, அவை ஒவ்வொன்றின் மீதும் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளை மொச்சை சுக்கிர பகவானுக்குரியது. பச்சரிசி மகாலட்சுமி லட்சுமி தேவிகுரியது. வரலட்சுமி விரதம் அன்று இப்படி தீபமேற்றி வழிபட்டால் சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். ஆனால் இந்த விளக்கை சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை கண்டிப்பாக எரிய வேண்டும்.
வரலட்சுமி விரதம் முடிந்த மறுநாள் காலை பூஜைக்கு பயன்படுத்திய வெள்ளை மொச்சை மற்றும் பச்சரிசியை யாருக்காவது தானமாக கொடுக்கலாம் அல்லது நீரில் போடலாம்.
வரலட்சுமி விரத நாளில் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தால் உங்களுக்கு வேண்டிய செல்வங்களை குறைவின்றி அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருப்பாள் மகாலட்சுமி தேவி. சுக்கிர பகவானின் அருளால் கடன் இல்லாமல் சுகபோக வாழ்க்கையை வாழ்வீர்கள். ஒரவேளை பணப்பற்றாக்குறை, கடன் தொல்லை இருந்தால் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
