- Home
- Spiritual
- Varalakshmi Viratham: வரலட்சுமி விரதம் அன்று தீர்க்க சுமங்கலி அருள் பெற இந்த 7 விஷயங்களை மறக்காமல் பண்ணுங்க.!
Varalakshmi Viratham: வரலட்சுமி விரதம் அன்று தீர்க்க சுமங்கலி அருள் பெற இந்த 7 விஷயங்களை மறக்காமல் பண்ணுங்க.!
வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் சுமங்கலி பெண்கள் மறக்காமல் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள் குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

வரலெட்சுமி விரதம் 2025
ஆடி மாதத்தில் வரும் விரத தினங்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். இந்த தினத்தில் விரதமிருந்து வழிபடும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரமும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமண சம்மந்தம் முடியும் என்பது ஐதீகம். அன்றைய தினம் வரலட்சுமி அன்னையை வீட்டிற்கு அழைத்து அவரது மனம் மகிழும் படி பூஜைகள் செய்து மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும். இந்த வருடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுவதால் இது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. வரலட்சுமி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி ஆகியவை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரலட்சுமி விரத வழிபாட்டின் போது செய்ய வேண்டிய ஏழு விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
கலசம் நிறுவுதல்
வரலட்சுமி விரதத்தின் முக்கிய அம்சம் கலசம் நிறுவுதல். பித்தளை அல்லது வெள்ளி கலசத்தில் பச்சரிசி நிரப்பி அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை மாவிலைகளுடன் வைக்க வேண்டும். அம்மனின் முகம் இருந்தால் தேங்காய் மீது வைத்து வழிபடலாம். இந்த கலசத்தை லட்சுமி தேவியாக பாவித்து அலங்கரித்து வழிபட வேண்டும். வழிபடும்போது அன்னையின் 108 நாமங்களை சொல்லி வணங்க வேண்டும். லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளியை கூறலாம். லட்சுமி தேவியின் புகைப்படம் அல்லது கலசத்திற்கு முன்னர் நெய் தீபம் ஏற்றி இந்த மந்திரங்களை கூற வேண்டும். மந்திரங்களை கூறும் பொழுது குங்குமம் அல்லது பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை கூறுவது வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை விலக்கி நேர்மறை ஆற்றல்களை கொண்டு வரும். வீடு தெய்வீக அருளால் நிறையும்.
அன்னைக்கு பிடித்த மலர்கள்
லட்சுமி தேவிக்கு அனைத்து மலர்களும் உகந்தது என்ற போதிலும் தாமரை மலர் படைப்பது மிகுந்த விசேஷமாகும். சிகப்பு அல்லது வெள்ளை நிற தாமரை மலர்களை படைக்க வேண்டும். அதேபோல் செண்பகப்பூ, தாழம்பூ, குங்கும பூ ஆகியவை மகாலட்சுமி தேவிக்கு உகந்தது என்பதால் இதையும் படைத்து வழிபடலாம். தாமரை மலர்களை கொண்டு அர்ச்சிப்பது, மாலையாக கட்டி சாற்றுவது ஆகியவை அன்னையின் மனதை குளிர்வித்து வீட்டை செழிப்பாக மாற்றும். வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக மாறும். அதேபோல் விரதத்தின் போது அன்னைக்கு உகந்த வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். சந்தனம், குங்குமம், வாசனை மலர்கள், அகர்பத்தி, திரவியப்பொடிகள், ஜவ்வாது ஆகியவற்றால் பூஜையறை முழுவதும் நறுமணம் பரப்ப வேண்டும்.
8 நாணயங்கள் வைத்தல்
வரலட்சுமி பூஜைக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கலசத்தைச் சுற்றி எட்டு நாணயங்களை வைக்க வேண்டும். இந்த அஷ்ட நாணயங்கள் அஷ்டலட்சுமிகளின் அம்சமாக கருதப்படுகிறது. பூஜையை நிறைவு செய்த பிறகு இந்த நாணயங்களை ஒரு மஞ்சள் அல்லது சிகப்பு துணியில் முடிந்து பூஜையறை, பீரோ, லாக்கர் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இதனால் அன்னையின் அருளால் ஆண்டு முழுவதும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். நாணயங்களை வைத்து வழிபடும் பொழுது அஷ்டலட்சுமிகளான தனலட்சுமி, தானிய லட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளை நினைத்து மனதார வழிபட வேண்டும்.
தாம்பூலம் வழங்குதல்
வரலட்சுமி விரதத்தில் மிக முக்கியமான ஒன்று மாங்கல்ய சரடு. மஞ்சள் நிறத்தில் உள்ள புதிய மாங்கல்ய சரடில் ஒன்பது முடிச்சுகள் போட்டு அதை அம்மன் காலடியில் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் அந்த சரடை கணவர் கையால் கழுத்தில் அணிந்து கொள்வது சிறப்பு. வரலட்சுமி விரதத்தின் போது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் பூ மற்றும் சிறிய பரிசு பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தை வழங்கலாம். இயன்றவர்கள் ரவிக்கை துணியும் வழங்கலாம். இது மகாலட்சுமியின் அருளைப் பெற்று தரும் என்பது நம்பிக்கை. அந்த தினத்தில் சுமங்கலிகளில் ஒருவராக அன்னை நம் வீட்டிற்கு வந்து மங்கலப் பொருட்களை பெற்று செல்வார் என்பதும் ஐதீகம். எனவே தாம்பூலம் வழங்குதல், வீட்டிற்கு வருபவர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
தீப தானம் மற்றும் அன்னதானம்
விரதம் முடிந்த பின்னர் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பசு நெய்யுடன் இருக்கும் விளக்கை தானமாக கொடுக்க வேண்டும். மகாலட்சுமியின் பாதத்தில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதால் செல்வம், வெற்றி ஆகியவை கிடைக்கும். தீப தானம் செய்வது என்பது நம்முடைய இருள் சூழ்ந்த நிலையை மாற்றி ஒளி கொடுக்கும். தெய்வீக அருளையும், தெளிவையும் நமக்கு அளிக்கும். கர்ம வினைகளை நீக்கும். அதே போல் பசுவுக்கு உணவுகளை தானமாக கொடுக்கலாம். பெண்களுக்கும் உணவுகள், இனிப்புகள் அல்லது அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுக்கலாம். வரலட்சுமி விரத தினத்தில் நாம் கொடுக்கும் இந்த தானமானது மகாலட்சுமியின் மனதை குளிர்வித்து நமக்கு பல மடங்காக திருப்பி கிடைக்கும். மஞ்சள் அல்லது வெள்ளை நிற இனிப்புகள், பாயாசம் ஆகியவற்றையும் தானம் அளிக்கலாம்.
தீர்க்க சுமங்கலி வரம்
அன்னைக்கு தாமரை மலர்களைப் போலவே துளசி இலைகளும் மிக உகந்ததாகும். துளசி இலைகளைக் கொண்டு கனகதாரா ஸ்தோத்திரம் படித்துக் கொண்டே அன்னைக்கு அர்ச்சனை செய்யலாம். இது வரலட்சுமி பூஜையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வரலட்சுமி நோன்பு தினத்தில் மனத்தூய்மையுடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அன்னையை நினைத்து வழிபடுபவர்களுக்கு அன்னை அளவில்லாத செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தருவார். சுமங்கலி பெண்களுக்கு இந்த வழிபாடு மேற்கொள்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும். திருமணமாகாத பெண்கள் சிரத்தையுடன் இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் மேற்கூறிய விஷயங்களை மறக்காமல் செய்து அன்னையின் அருளை பரிபூரணமாக பெறுங்கள்.